தமிழர்களுக்கான அரசியல் செய்திகள்:





ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம் – வைகோ
தமிழ் ஈழ முகமூடியை மறுபடியும் தாங்கி வலம் வரத் தொடங்கி விட்டார் கருணாநிதி. நேரத்துக்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வேடம் தாங்குவது அவருக்கு வழக்கமானதுதான். ஆனால், அதற்குத் தமிழ் இனத்தையும் தமிழ் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட உடல்களையும் பணயம் வைக்க அவர் முடிவு எடுத்திருப்பதுதான் வேதனையானது.
இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு ஈவு இரக்கம் இன்றி, தமிழ் இனப்படுகொலையை நடத்தியதற்கும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பதற்கும், இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ராடார்களும், ஆயுதங்களும் தந்ததுதான் அடிப்படைக் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாயும் வழங்கி, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் அவ்வப்போது அனுப்பிவைத்து, சிங்களவன் நடத்திய இனக்கொலை யுத்தத்தை இயக்கியதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. இந்த மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்த இந்திய அரசின் அமைச்சரவையில் பங்கு ஏற்று உடந்தையாகச் செயல்பட்டார் கலைஞர் கருணாநிதி.
‘தமிழ் இனப்படுகொலைக்கு இவரும் ஒரு காரணம்’ என்று உலகத் தமிழர்கள் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள பழியில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும், தடுமாறித் தத்தளிக்கும் தி.மு.கழகத்தின் தொண்டர்​களை ஏமாற்றுவதற்காகவும், தமிழ் ஈழ விடுதலை முகமூடியை அணிந்துகொண்டு, தமிழர் தரணியில் இப்போது பவனி வரத் துடிக்கிறார்.
2004-ம் ஆண்டு, சோனியாவின் ஆளுமையில், டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன், இலங்கையோடு இந்தியா ராணுவ ஒப்பந்தம் செய்ய இருக்கிறது என்ற செய்திகள் வெளியானபோது, அதைத் தடுப்பதற்குக் கருணாநிதி, ஒரு துரும்பையாவது தூக்கிப் போட்டாரா? ஆட்சேபணை தெரிவித்தாரா? எடுத்ததற்கெல்லாம் கடிதங்கள் எழுதினேன் என்று பட்டியல் போடுகிறவர், இதுகுறித்து ஏதாவது ஒரு கடிதம் எழுதியதாகச் சொல்ல முடியுமா?
சிங்கள அரசுக்கு, இந்திய அரசு ராடார்கள் கொடுக்க இருக்கின்ற செய்தி வந்தபோது, அது தமிழர்களைக் குண்டு வீசிக் கொல்வதற்குத்தான் பயன்படும் என்று பதறித் தடுக்க முனைந்தாரா? 2007-ல் இந்தியா இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்தபோது, இவர் அதைக் கண்டித்தது உண்டா?
இந்திய அரசு, ஈழத் தமிழர்களை அழிக்க, சிங்கள அரசுக்குச் செய்து வந்த உதவிகளை, மேற்கொண்ட நடவடிக்கைகளை, எழுத்து மூலமாகக் குறிப்பிட்டு, இந்திய அரசைக் கண்டித்து, இந்தத் துரோகத்தைத் தமிழ் இனமும், வருங்காலத் தலைமுறையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று எச்சரித்தும், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, நேரடியாகப் பலமுறை சந்தித்துத் தந்த கடிதங்களைத் தொகுத்து, குற்றம் சாட்டுகிறேன் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும், நூலாக நான் வெளியிட்டதற்காக என் மீது, கருணாநிதி அரசு தேசத்துரோக வழக்கைத்தானே பதிவு செய்தது.
தமிழ் ஈழம் என்ற உயிர் மூச்சான லட்சியத்துக்காக, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்று நான் பேசியதற்காக, அதே தேசத் துரோகக் குற்றச்சாட்டைத் தொடுத்து என்னைக் கைது செய்து புழல் மத்தியச் சிறையில் அடைத்தவர் அவர்.
1993-ம் ஆண்டு தி.மு.கழகத்தில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்று அவர் முடிவு எடுத்தபோது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதுதான் பழியைச் சுமத்தினார். எனது அரசியல் முன்னேற்றத்துக்காக, கலைஞர் கருணாநிதியை விடுதலைப் புலிகள் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்ற ஊர்ஜிதமாகாத, மத்திய அரசின் உளவுப்பிரிவுத் தகவலைக் குற்றச்சாட்டாக ஆக்கி, என்னைத் தி.மு.கழகத்​தில் இருந்து நீக்கினார்.
விடுதலைப்புலிகள் மீது அல்லவோ அன்று கொடும் பழியைச் சுமத்தினார்?
எதற்கெடுத்தாலும், சகோதர யுத்தம்தான் ஈழத் தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம் என்று, ஒரு நாடக ஒப்பாரி வைக்கிறாரே, கோடிக்கணக்கான மக்கள் நெஞ்சில், அண்ணாவின் இயக்கத்தைச் சுடராக ஏற்றிய, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை இவர் சகித்தாரா? விளக்க அறிக்கைக்கான கெடு முடிவதற்கு உள்ளாகவே, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அல்லவா அவரை நீக்கச் செய்தார்?
கட்சியை, தலைமையை, உயிருக்கும் மேலாக நேசித்து, சர்வபரித் தியாகத்துக்கும் சித்தமாக இருந்த என் மீது கொலைப் பழி சுமத்திய​போது, அதை உண்மை என்று தொண்டர்கள் நம்பி இருந்தால் என்ன ஆகும்? ‘எத்தகைய துன்பத்துக்கு அவன் ஆளாவான்? எத்தனைத் தலைமுறைகளுக்கு, அவனும் அவனது குடும்பமும் இந்தப் பழியைச் சுமக்க நேரும்?’ என்று கடுகு அளவேனும் கருதியது உண்டா? மனிதாபிமானமோ, மனிதநேயமோ, அவர் மனதில் நிழலாடியது உண்டா?
புரட்சி அமைப்புகளில் விடுதலை இயக்கங்​களில் எதிர்ப் புரட்சியாளரை, ஊடுருவல் துரோகிகளை எப்படி நடத்தினார்கள் என்பதற்கு, சரிதத்தில் ஏராளமான சாட்சியங்கள் உண்டு. மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் உயிர் குடிக்கச் சதி செய்த மாத்தையாவை, மாவீரன் என்றும், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் கைக்கூலியான கருணாவை, வீரத் தளபதி என்றும் இவர்களையெல்லாம் பிரபாகரன் அழித்துவிட்டார் என்றும் வசை பாடியது யார்? அதைவிடக் கொடுமை என்னவென்றால், ‘லட்சியத்துக்காகப் போராடும் வேளையில், களத்தில் இறந்த வீரர்களுக்குக் கல்லறைகள், துயிலகங்கள், கட்டுவதில் சக்தியையும் நேரத்தையும் வீணாக்கினார்கள்’ என்று புலிகளை ஏகடியம் செய்தவர் யார்?
தமிழ் இனத்தின் ஒளி விளக்காம் பிரபாகரனைத் தன் மணிவயிற்றில் சுமந்த அன்னை பார்வதி அம்மையார், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறத் தமிழகம் வந்தபோது, தமிழ்நாட்டு மண்ணில் அவர் கால் எடுத்துவைக்கவும் அனுமதிக்காமல், வந்த விமானத்திலேயே, மேலும் நான்கு மணி நேரம் திரும்பிப் பயணிக்கின்றபோது, அந்தத் தாயின் உயிருக்கே ஆபத்து விளையக்கூடுமே என்ற அபாயத்தைப் பற்றியும் எள் அளவும் எண்ணிப் பார்க்காமல் விரட்டி அடித்த குற்றவாளி கலைஞர் கருணாநிதி.
உலகில் எங்கும் நடைபெற்று இராத இக்கொடுமையைக் கண்டித்து, இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்த முனைந்த என்னையும், அண்ணன் பழ.நெடுமாறன், விடுதலை இராசேந்திரன், ஆவடி மனோகரன், பாவலர் இராமச்சந்திரன், எம்.நடராசன் உள்ளிட்ட அனை​வரையும், கைது செய்தது மட்டும் அல்ல, தனித்தனியாக நான்கு மத்தியச் சிறைகளுக்குப் பிரித்து அனுப்ப உத்தரவிட்டவரும் இந்தப் பெரிய மனிதர்தான்.
தமிழர் மனமெல்லாம் அணையாத சுடராக ஒளி வீசிக்கொண்டு இருக்கின்ற தியாக தீபங்களாம் முத்துக்​குமார் உள்ளிட்ட 17 பேர், ஈழத் தமிழரைக் காக்க, யுத்தத்தை நிறுத்த, இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்க, தீக்குளித்து மடிந்தபோது இவர் இரங்கல் தெரிவித்தது உண்டா? தனது மகன் பிறந்த நாளை, பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டுப் பீதாம்பரத்துடன் இவர் கொண்டாடிக்கொண்டு இருந்தபோது தியாகச்சுடர் முத்துக்குமாரின் உயிர் அற்ற சடலம், கொளத்தூரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வீர வணக்கத்தை ஏற்றுக்கொண்டு இருந்தது. ஈழத் தமிழருக்காகப் பள்ளப்பட்டி ரவி தீக்குளித்தபோது, ‘குடும்பச் சண்டையால் செத்தான்’ என்று கொச்சைப்படுத்தி அறிக்கை வெளி​யிட வைத்தவரும் இவர்தான். ஈழத் தமிழர்க்காகப் போராடிய வழக்கறிஞர்களுக்கு எதிராக லத்தியைத் தூக்கியதும் இவரே.
சென்னைக் கடற்கரையில், அண்ணா சதுக்கத்தில் சாக முடிவு எடுத்து உண்ணாவிரதம் இருந்தேன் என்று, எந்தக் கூச்சமும் இல்லாமல் இன்றைக்கு எழுதுகிறார்.
முதல் நாள் இரவு, வெளிநாடுகளில் இருந்து வந்த தொலைபேசிகளில், ஈழத் தமிழர்கள் பதற்றத்தோடு, விம்மலும், புலம்பலுமாக, ”நாளை மாலைக்குள் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரை முடித்துவிடுவார்கள் என்று செய்தி வருகிறதே? தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியிடமும் இதுபற்றி நாங்கள் முறையிட்டு உள்ளோம்” என்று என்னிடம் சொன்னார்கள். அப்படி ஒன்று நடந்தால், பழிக்கும் வெறுப்புக்கும் தானும் ஆளாக நேரும் என்று கருதித்தான் இவர் கடற்கரை உண்ணாவிரத நாடகத்தைப் போட்​டார்.
ஆனால், தில்லி ஜன்பத் சாலை, 10-ம் எண் வீட்டில் இருந்து, மிரட்டல் தொனியில் எதிர்ப்பு முக்கிய நபர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதால், உண்ணாவிரதத்தை மூன்று மணி நேரத்திலேயே முடித்துக்கொண்டு, மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்விட்டார். இவரது சாகும் வரை உண்ணாவிரதம் அன்று சந்தி சிரித்தது.
‘இனி பலத்த தாக்குதல் எதுவும் நடக்காது’ என்று கருணாநிதி சொன்னதால், அன்று மாலையில் பதுங்கு குழிகளில் இருந்து தமிழர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் மீதும் ராஜபக்ஷே குண்டு வீசினான்.
அதுபற்றிக் கேட்டதற்கு, ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று அலட்சியமாகச் சொன்ன​வர் கருணாநிதி.
தமிழகத்திலும், தரணியெங்கும் தமிழர்கள் வேதனையில் துடித்தபோது, ‘இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய அரசின் கொள்கைதான் என் கொள்கை’ என்று திட்டவட்டமாக அல்லவோ சொன்னார்? அப்படியானால், இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தில், நடத்தப்பட்ட இனப் படுகொலையிலும், தானும் கூட்டுக் குற்றவாளி என்பதுதானே இவரது ஒப்புதல் வாக்குமூலம். ‘ராஜபக்சேவை விமர்சிப்பது, அவருக்கு ஆத்திரத்தை மூட்டிவிடும். அதனால், தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே, அவரைக் குறை சொல்லக் கூடாது’ என்று கீதோபதேசம் செய்தவர்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்குப் பொருளாதாரத் தடை விரித்தபோது, அதை உடைப்பதற்காக டெல்லிக்கு வந்தார் ராஜபக்சே. அவருக்கு, இவர் முட்டுக்கொடுக்கும் மத்திய அரசுதான் கோலாகல வரவேற்புக் கொடுத்தது. அதை கருணாநிதி விமர்சித்தது உண்டா? திருப்பதி கோயிலில் கொலைகாரன் ராஜபக்சேவை வரவேற்றுப் பூரண கும்ப மரியாதை செய்ததை, இவர் விமர்சித்தது உண்டா?
2008-ம் ஆண்டில், ஈழத் தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேரை, அம்மணமாக்கி கண்களைக் கட்டி, கைகளைப் பின்புறமாகக் கட்டி, மிருகங்களான சிங்களச் சிப்பாய்கள் காலால் எட்டி மிதித்து, மண்டியிடச் செய்து, பிடறியில் சுட்டு, ரத்த வெள்ளத்தில் அவர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை, லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சி, ஆவணப் படமாகவே வெளியிட்டது. அதைக் கண்டு, அகிலமே அதிர்ச்சியுற்றது. ஆனால், இது போலிப் படம் என்று சொன்னார்கள் இருவர். ஒருவர், மகிந்த ராஜபக்சே. ”இது ஏதோ பழைய படம் போலத் தெரிகிறது” என்று ஏளனமாகப் பரிகசித்தவர் கலைஞர் கருணாநிதி.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கி மூன், மார்சுகி தாருஸ்மன் தலைமையில் மூவர் குழுவை அமைத்தார். அந்த மூவர் குழு, இலங்கைத் தீவில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, இதயத்தைப் பிளக்கும் வகையில் ஆதாரங்களோடு அறிக்கை​யாகத் தந்தார்களே. அந்த அறிக்கையைப் படிக்கும்போதே நெஞ்சம் நடுங்கும், கண்ணீர் கொட்டுமே. பக்கம் பக்கமாக எதற்கெல்லாமோ அறிக்கைகளும் மடல்களும் தீட்டுகின்ற கலைஞர் கருணாநிதி, இந்த மூவர் குழு அறிக்கையைப் பற்றி இதுவரை ஏதாவது எழுதியது உண்டா? கிடையாது.
ஈழத் தமிழ் இனத்தைக் கருஅறுக்க, சிங்களவனுக்கு இந்திய அரசு செய்த உதவிக்கு, முழுக்க முழுக்கத் துணையாக இருந்து, தமிழகம் கொந்தளித்து எழாமல் தடுக்கின்ற மாய்மால வேலைகள் செய்து, அவ்வப்போது நீலிக்கண்ணீர் அறிக்கைகளையும் வழங்கி ஏமாற்றியதைத் தவிர இவர், இதுவரை உருப்படியாக எதையும் செய்யவில்லை.
தந்தை செல்வா வெற்றி பெற்ற காங்கேசன் துறை இடைத்தேர்தல், 1975-ல் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்குக் கட்டியம் கூறிற்று. 1976 மே 16-ல், வட்டுக்கோட்டை பண்ணாகத்தில், தந்தை செல்வா தலைமையில், தமிழர் அமைப்புகள் கூடி, சுதந்திரத் தமிழ் ஈழப் பிரகடனம் செய்தன. ”இனி, இளந்தலைமுறை இதை முன்னெடுத்துச் செல்லட்டும்” என்றார் தந்தை செல்வா. ஈவு இரக்கம் அற்ற கொலை வெறியுடன், தமிழ் இனத்தை அழிக்க முப்படைத் தாக்குதல் நடத்திய சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து, பிரபாகரன், ஆயுதம் தாங்கிய போர் நடத்தினார். உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீர சாகசங்களை, யுத்தக் களத்தில் செய்து, வெற்றி மேல் வெற்றியும் குவித்தார்.
ஓர் அரசுக்கான அனைத்துத் துறைகளையும் அமைத்தார். தரைப் படை, கடற் படை, வான் படை நிறுவினார். மலரும் தமிழ் ஈழத்துக்கு இனி உலகம் ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழலில்தான், இந்தியா முழு ஆயுதப் பலத்தையும் தந்து, பல வல்லரசுகளின் ஆயுத உதவிகளையும் சிங்களவன் பெறுவதற்கு உடன்பட்டு, யுத்தக் களத்தில் விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவையும் சரிவையும் ஏற்படுத்தியது.
‘இந்த யுத்தத்தை நடத்தியதும் இயக்கியதும் இந்திய அரசுதான்’ என்று, இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார் ராஜபக்சே. அவரது அமைச்சர்களும் சொன்னார்கள். இதைக் கருணாநிதி​யால் மறுக்க முடியுமா?
கடந்த ஆண்டு ஜூன் 1-ம் நாள், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற அரங்கத்தில், ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்னை மாநாட்டில் நான் உரையாற்றியபோது, அந்த அமர்வில் அதிக நேரம் எனக்கு ஒதுக்கப்பட்டது. ஈழப்பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு. அதுதான், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் என்றேன்.
தமிழர் தாயகமான, தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து, சிங்கள ராணுவமும், போலீஸும் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் அடியோடு அகற்றப்பட வேண்டும். சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக சுதந்திரத் தமிழ் ஈழம் அமைக்க, தமிழர் தாயகத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் உலகத்தின் பல நாடுகளில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே பொது வாக்கெடுப்பில் பங்கேற்க ஐ.நா.மன்றமும், அனைத்துலக நாடுகளும் தக்க வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். பொது வாக்கெடுப்பு என்பதையும், உலகம் முழுவதையும் பல நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் அதில் பங்கேற்க வழி செய்ய வேண்டும் என்பதையும், ஈழத் தமிழர் பிரச்னையில் நான் முதன்முதலாகப் பதிவு செய்தேன்.
இப்படி நான் முன்வைத்த கருத்தை, உலகெங்கும் உள்ள தமிழ் ஈழச் சொந்தங்கள், எல்லையற்ற மகிழ்ச்சியோடு வரவேற்று மனதாரப் பாராட்​டியதோடு, ”இதுதான் நமது இலக்கு, இந்த இலக்கை நோக்கி முன்னெடுத்துச் செல்வோம்” என்றனர். என் வாழ்நாளில், மன நிறைவாக ஆற்றிய கடமைகளுள் இதுவும் ஒன்று என எண்ணி, அந்த இரவில் நான் நிம்மதியுற்றேன். ஆனால், திடீரென்று கலைஞர் கருணாநிதி, பொதுவாக்கெடுப்பு, சுதந்திரத் தமிழ் ஈழம் என்கிறார். இவரது மாய்மாலத்தை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்.
தமிழர்கள் சிந்திய செங்குருதியும், தரப்பட்ட உயிர்ப் பலிகளும், தமிழ் இனத்துக்கு எவரெல்லாம் துரோகம் இழைத்தார்களோ, அவர்களுக்குச் சவுக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கும். தமிழர்களின் மறதியை முதலீடாக நினைத்து கருணாநிதி தனது புதிய அறுவடையைத் தொடங்குகிறார். அதை முளையிலேயே முறிக்க வேண்டும்!
கொடுந்துயரில் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு உரிமை வாழ்வு கிடைக்க… சுதந்திரத் தமிழ் ஈழம் மலரட்டும்!
மூலம்: ஜூனியர் விகடன் – வைகாசி 6, 2012
பிரசுரித்த நாள்: May 02, 2012 13:34:00 GMT




தமிழ் இனம் தலை நிமிர்ந்தே வாழ்வதற்கு உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருவதற்கு தயங்க மாட்டோம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் நடைபெற்றபோது; இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வு பூர்வமான அக்கறையை, அன்றே காட்டியிருக்கக் கூடாதா? இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கலாமே; என்ற ஒரு எண்ணம், ஆதங்கம் இங்குள்ள தமிழர்கள் சிலருக்கு மாத்திரமல்லாமல், தரணியெங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களில் சிலருக்கும் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது!

ஆனால் அவர்களுக்கே தெரியும்! இந்தப் போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்பது ஓர் புறமிருக்க; பல்வேறு அணிகளாக இருந்த போராளிகளும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு – தமிழர் உயிரை தமிழரே பறிப்பதற்கு காரணகர்த்தாக்களாக ஆகிவிட்டார்கள்.

சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக அவர்கள் ஒவ்வொரு அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டுங்கூட, அந்த அணிகளிடையே இருந்த உட்பகையை நம்மால் தீர்க்கவும் முடியவில்லை; அதன் காரணமாக ஏற்பட்ட விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியைத் தடுக்கவும் முடியவில்லை.

தி.மு.க. எம்.பி.க்கள் பதவி விலகல்

தி.மு.க. அரசின் சார்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அதையொட்டி, கழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள்.

18-10-2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகவே தொலைபேசியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேசினார். 22-10-2008 அன்று மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கைத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்திலே குறிப்பிட்டார்.

24-10-2008 அன்று சென்னையில் பிரமாண்டமான “மனித சங்கிலி” ஒன்றினை நடத்தினோம். 26-10-2008 பிரணாப் முகர்ஜி சென்னை வந்து என்னிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசினார். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற, மத்திய அரசு போர் நிறுத்தத்திற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி 23-4-2009 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத்தேன்.

அந்த வேலை நிறுத்தம் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

இரவு முழுவதும் தூங்கவில்லை

26-4-2009 அன்று விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா. சபை ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம். இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும். இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது. இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அறிவித்தார்கள்.

ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் இலங்கை அரசு அந்த அறிவிப்பை “ஜோக்” என்று கேலி செய்தது. 26-ஆம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்கு பின் அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை.

போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் என்னை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன். எந்தச் செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் என் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றேன்.

சாகும்வரை உண்ணாவிரதம்

அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே இந்த வயதிலே செய்து கொண்டு, நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த நான் என் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப்படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான் யாருக்கும் கூறாமல், கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், நானாக முடிவெடுத்துச் சென்றேன். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்திய பிறகு மதியம் 1 மணி அளவில் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்.

ஆனால் அதற்குப் பின்னரும் இலங்கை சிங்கள அரசு ராஜபக்ஷேயின் சிங்கள பேரினவாதப் பிடிவாதத்தினால் களத்தில் நின்ற போராளிகளையெல்லாம் கொன்று குவித்தனர். போராட்டத்தை நிறுத்துவதற்கான எவ்வளவோ முயற்சிகளை நாம் மேற்கொண்டோம், அதற்கு உறுதுணையாக மத்திய அரசும், பிரதமரும், மத்திய மந்திரிகளும் இருந்தும் கூட, சிங்கள அரசினர் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் ஒவ்வொரு முறையும் மீறி, போரைத் தொடர்ந்து, நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட சரிவைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாகை சூடினர்.

உடல், பொருள், ஆவி

வீழ்ந்தது தமிழின எழுச்சி ஈழத் தமிழகத்தில்! எந்த ஒரு இனத்தின் எழுச்சியும் வீழ்வதும் தாழ்வதும்; பின்னர் வெற்றிச் சிகரம் ஏறுவதும் உலக வரலாற்றில் காணக்கூடிய ஒப்பற்ற உதாரணங்கள். ஒற்றுமை இல்லாத காரணத்தாலும் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்டும் காரணத்தாலும் தொடர்ந்து வீழ்ந்துபட்டு வருகின்ற இனமாக தமிழ் இனம் இருந்தாலுங் கூட அந்த இனத்திற்கு தமிழ் ஈழத்தில் தற்காலிகமாக ஏற்பட்டிருப்பது; நிரந்தரமானதல்ல என்பதையும்; அது நிரந்தரமாக இருந்துவிடக் கூடாது என்பதையும் – அசையாத நம்பிக்கையுடன் மனத்தில் கொண்டு களத்தில் மறைந்த மாவீரர்கள் அனைவருக்கும் இறுதி வணக்கத்தைத் தெரிவித்து – இனியும் தமிழ் இனம் தலை நிமிர்ந்தே வாழ்வதற்கு- நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருவதற்கு தயங்க மாட்டோம் என்ற உறுதியுடன்; காந்தி காட்டிய வழியில்; அண்ணா வகுத்த நெறியில்; தன்மான உணர்வைத் தட்டியெழுப்பிய பெரியார் போதித்த பாதையில்; ஈழத் தந்தை செல்வா ஊட்டிய உணர்வில்; அறப்போர் தொடர்ந்திட அணி வகுப்போம்!