ஏறுதழுவுதலின் மீதான தடை: நீதியா அல்லது தமிழர் பண்பாட்டின் மீதான தாக்குதலா?

-க. தில்லைக்குமரன், நன்றி: சிறகு இதழ்

அண்மையில் தலைமைநீதிமன்றம் இரண்டு முதன்மையான தீர்ப்புகளை வழங்கியது. பல ஆண்டுகளாக சர்ச்சைக்குள்ளாகிவரும் இரு முதன்மையானச் சிக்கல்கள் இவை. அதில் ஏறுதழுவுதலின் மீதான தடையைச் சற்று அலசுவோம்.

 ஏறுதழுவுதல்:

தமிழகத்தின் பழம்பெரும் விளையாட்டுகளில் ஒன்று ஏறுதழுவுதல். இதற்கு மஞ்சுவிரட்டு, சல்லிக்கட்டு போன்ற பலவகைப் பெயர்கள். இந்த மிக முதன்மையான விளையாட்டை தலைமைநீதிமன்றம் தடை செய்துள்ளது. இதை வரவேற்றும், எதிர்த்தும் பலர் எழுதிவருகின்றனர். இச்சிக்கலை காரணமாக வைத்து சிலர் தமிழர்களிடம் பிரிவினையை ஊட்டிவருவது கவலையளிக்கிறது. மிருகவதையைக் காரணம் காட்டி ஏறுதழுவுதலுக்கு நீதியரசர் தடை விதித்துள்ளார். இவருக்கு இவ்விளையாட்டின் வரலாறும், காரணமும் தெரிந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்ல இத்தீர்ப்பின் மூலம் இந்த நீதியரசருக்கு இந்த விளையாட்டைக் குறித்தும் எவ்வித அறிவும் இல்லை என்பது தெளிவாகிறது.  அடுத்து சிலர் இந்த விளையாட்டு சாதியை வளர்க்கிறது என்று அண்டப் புலுகை துவக்கி இந்தத் தடையை வரவேற்கின்றனர். இவை இரண்டும் முற்றிலும் தவறான கண்ணோட்டங்கள் என்பதை கீழே காண்போம்.

jallikkattu1

மஞ்சுவிரட்டு – காளை மாடுகளை துன்புறுத்துகிறதா?:

முதலில் இந்த விளையாட்டின் முறையைப் பார்ப்போம். இதில் பங்கேற்கும் காளைகளை இந்த விளையாட்டிற்காகவே வளர்த்துவருகின்றனர். கொம்புகள் சீவி, மிக்க பலம் தந்து, பார்ப்பதற்கே அச்சம் கொடுக்கும் வகையில் உழவர்கள் இக்காளைகளை வளர்க்கின்றனர். காளைகளை எவராவது அடக்கிவிட்டால் அது தங்களுக்கு இழுக்கு என்பதால் அக்காளைகளை மிக கவனமாக வளர்த்து வருவது உழவர்களின் வழக்கம். ஏறுதழுவுதல் என்பதின் பொருள், காளையை தழுவுவது. மஞ்சு விரட்டு என்பதைவிட இதை மனிதனை காளை விரட்டும் நிகழ்ச்சி என்றுதான் கூறவேண்டும். இதில் காயமடைவது காளையை அடக்க முயலும் ஆண்களே, காளைகள் பெரும்பாலும் காயமடைவதில்லை. ஒவ்வொரு காளையையும் வளர்க்கும் உழவனுக்குத்தான் தெரியும் அவன் போற்றி வளர்த்த காளை மாடுகளின் அருமை. அதை ஒரு காலத்திலும் துன்பப்படவைக்க அவன் எக்காலத்திலும் ஒப்புக்கொள்வதில்லை.

ஒருவேளை நீதியரசர், சுபெய்ன் நாட்டில் காளையிடம் சண்டையிடும் (Bull Fighting) விளையாட்டைப் பார்த்து, அதைத்தான் மஞ்சுவிரட்டு என்று நினைத்து விட்டாரோ? அந்நாட்டில் நடைபெறும் அந்த விளையாட்டில் மாடு இறக்கும்வரை ஆட்டம் தொடரும். அதை அடக்கவரும் வீரரின் கரத்திலே வாள் இருக்கும். அந்த மாடு இறந்தவுடன் அது இறைச்சி உணவாக உண்ணப்படும். நம் ஊரில் நடைபெறும் மஞ்சுவிரட்டில் காளை இறப்பதில்லை, காயப்படுவதும் இல்லை. காளையை தமது உடல் பலத்தால் (வாள் கொண்டல்ல) மட்டும் அடக்கியவுடன், விளையாட்டு நிறுத்தப்பட்டு காளைகள் களத்திலிருந்து அகற்றப்படும். தோல்வியுற்ற காளைகளை கொல்வது தமிழர் வழக்கமல்ல.

jallikkattu2

இன்னொன்று, மிருகவதை என்று தீர்ப்பில் எழுதி இந்த வீரவிளையாட்டை மட்டும் தடை செய்துள்ளார் நீதியரசர். ஆனால் உணவாக உண்பதில் தடையில்லை. நாள்தோறும் தமிழகத்திலிருந்து இந்த மாடுகள் கேரளத்திற்கு இறைச்சிக்காக எடுத்துச் செல்வதை தடை செய்யவில்லை, தமிழனின் பண்பாட்டினை தடை செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இன்று கோழி, ஆடு, மாடுகள் இறைச்சிக்கூடங்களில் படும்பாட்டை இவர் தடை செய்யவில்லை. அந்த பறவைகளையும் விலங்குகளையும் உயிர்களாகக்கூட கொலைக்கூடங்கள் கருதுவதில்லை. எழுதுகோல், கரிக்குச்சி போல் ஒரு பொருளாகதான் பார்க்கிறார்கள். இக்கொடுமைகள் மட்டுமல்லாமல் இவைகளுக்கு வளர்ச்சி ஊக்கமருந்து (Growth hormone) என்கிற பெயரில் நஞ்சை ஏற்றி 90 நாட்களில் வளருவதை 30 நாட்களில் வெறும் உடலை மட்டும் வளர்த்து, அதன் எடையைத் தாங்காமல் 30 நாட்களும் உட்கார்ந்தே இருக்கும் கோழிகளை நாம் பார்த்திருக்கிறோம். சில கோழிகள் நகரமுடியாமல் கால்கள் கூண்டின் கம்பிகளில் பதிந்துவிடுகின்றன. காலை வெட்டிதான் அக்கோழிகளை கூண்டிலிருந்து அகற்றுகின்றனர். மற்ற விலங்குகளுக்கும் இது போன்ற கொடுமைகளிலிருந்து விலக்கில்லை. இதையெல்லாம் தடைசெய்ய நீதியரசருக்குத் தோன்றவில்லை. கோவில்களில் யானைகளை பிச்சையெடுக்க வைப்பது எதில் சேர்ப்பது? அந்த யானைகளை கட்டுக்குள் கொண்டுவர பாகன்கள் செய்யும் கொடுமைகளைப் பலர் வெளிக்கொணர்ந்திருக்கின்றனர். இந்த கொடுமைகளைத் தொட்டால் மதச்சிக்கலாகிவிடும் என்கிற அச்சம்.

நாம் அனைவரும் ஒருமுறையாவது வட்டரங்கு விளையாட்டை (சர்க்கசு) வேடிக்கைப்பார்க்கச் சென்றிருப்போம். அது போன்ற ஒரு கொடுமைக் கூடம் ஏதுமில்லை. விலங்குகள் செய்யும் சாகசத்தை நாம் அனைவரும் கைத்தட்டி ஆரவாரித்திருப்போம். ஆனால் அச்செயல்களைச் செய்யவைக்க அந்த விலங்குகள் பட்டபாடு நமக்குத் தெரியுமா? எத்தனை நாட்கள் அவை பட்டினியாகவிருந்திருக்கும்? எவ்வளவு அடி வாங்கியிருக்கும்? நான் வட்டரங்கு விளையாட்டுக்குச் சென்று 30 ஆண்டுகள் ஆகின்றன. சிறுவயதில் அறிவில்லாதபோது குடும்பத்துடன் போனதுதான். மிருகவதையைப் பற்றி பேசுபவர்கள் முதலில் வட்டரங்கு விளையாட்டைத் தடை செய்ய போராடட்டும்.

 மஞ்சுவிரட்டு சாதியை வளர்க்கிறதா?:

இந்த பேத்தல் திடீரென்று இன்றுமுதல் துவங்கியுள்ளது. மஞ்சுவிரட்டு பழங்காலந்தொட்டு விளையாடப்பட்டு வருகிறது. அப்படியானால் இவர்கள் பழந்தமிழகத்தில் சாதி இருந்தது என்று கூறுகிறார்களா? சங்க காலத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்ததில்லை என்று அமெரிக்காவில் வாழும் தமிழறிஞர் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன் பல ஆண்டுகளாக எழுதி வருகிறார். இவர் தென்னாசிய ஆய்வு தகவல் அமைப்பின் (www.sarii.org) தலைவராக தமது பகுதி நேரத்தில் தொண்டாற்றி வருகிறார். அவர் எழுதிய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுரையான ‘On the Unintended Influence of Jainism on the development of Caste in Post-Classical Tamil Society’ என்கிற கட்டுரையில் சாதிகள் சங்ககாலத்தில் இருந்ததில்லை என்பதை சான்றுகளுடன் தெளிவாக நிறுவுகிறார். சாதியை எதிர்ப்பவர்கள் படிக்க வேண்டிய மிகமுக்கியக் கட்டுரையிது. ஏதும் படிக்காமல் வெறும் வெறுப்பை மட்டும் வைத்து பேசுபவர்களும், எழுதுபவர்களும் வெகுவளவில் உள்ளனர் என்பது இன்றைய மிக கவலைக்குரிய நிலை.

எனவே, தமிழக அரசு உடனடியாக இத்தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடுக்க வேண்டும். நல்ல வழக்குறைஞர்களை வைத்து இத்தடையை நீக்க வழி செய்ய வேண்டும்.

–   திரு. க. தில்லைக்குமரன், நன்றி: சிறகு இதழ்