தமிழ்நாட்டில் கருத்துரிமையைப் போற்றிப் பாதுகாப்போம் – எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்குத் துணை நிற்போம் !

தமிழ்நாட்டில் கருத்துரிமையைப் போற்றிப் பாதுகாப்போம் !

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்குத் துணை நிற்போம் !

தமிழ்நாட்டில் சாதி, மத அரசியல்வாதிகளின் தாக்கம் ஓங்குவது மிகவும் வருத்தமளிக்கின்றது. ஆட்சியதிகாரத்தினைத் தீய ஆற்றல்கள் கைப்பற்றி அதனை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்கும், ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கும் தரப்பட்ட உரிமமாகக் கருதி அச்சுறுத்துவதும், அமைதியைச் சீர்குலைப்பதும் தொடர்ந்து நடைபெற்றுவருவது வருத்தமளிக்கின்றது. சாதி, மத அடையாளங்களைக் கடந்து தமிழினமாக ஒன்றுபட வேண்டிய காலக்கட்டத்தில் உள்ள நாம் இதனைக் கண்டிக்க வேண்டும்.

அதிலும் எந்த முரண்பட்டக் கருத்தையும் எத்தடங்கலுமின்றி முன்வைக்கும் அளவிற்குப் பல்லாயிரம் ஆண்டுகளாகவே கருத்துரிமையைப் போற்றிப் பாதுகாக்கும் தமிழர் மண்ணில் இப்பட்டிப்பட்ட சாதி, மத அடிப்படைவாதிகளின் கையோங்குவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டுக் குரலெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். ‘நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் அதைச் சொல்வதற்கு உங்களுக்குள்ள உரிமையைக் காப்பாற்ற உயிரையும் தருவேன்’ எனும் மேநாட்டு அறிஞர் வோல்ட்டயர் அவர்களின் கருத்திற்கிணங்க, உடன்பாடற்ற கருத்தையும் கூறும் உரிமை ஒருவர்க்கு உள்ளது என்பதை ஏற்கும் நிலையை நாம் எட்ட வேண்டும்.

நான்காண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட மாதொருபாகன் எனும் நெடும்புனைவிற்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் பல வகையில் கடுமையான இக்கட்டுக்கு உள்ளாக்கப்பட்டு, தற்பொழுது எழுத்துத்துறையில் இருந்து விலகிச்செல்லும் அளவிற்கு அவர்க்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கும் அனைத்துத் தீய ஆற்றல்களையும் உலகத் தமிழ் அமைப்பு கடுமையாகக் கண்டிக்கின்றது. அதே நேரம் இந்நெருக்கடிகளை அடிப்படைவாதிகளுக்கு எதிராக முன்பிலும் தீவிரமாகச் செயல்படுவதற்கான நெஞ்சுரமாக வளர்த்துக்கொண்டு, தொடர்ந்து தமது கருத்துக்களை எழுத பெருமாள் முருகன் அவர்கள் முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

 

அன்புடன்,

க. தில்லைக்குமரன்,

தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

04-சுறவம்-2046, அமெரிக்கா