தமிழ்நாட்டுக்காக ஈழத்தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் – த.தே.பே. தலைவர் திரு. பெ.மணியரசன் உரை !

தமிழ்நாட்டுக்காக ஈழத்தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் – த.தே.பே. தலைவர் திரு. பெ.மணியரசன் உரை !

 

தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களுக்காவும், தமிழ் மண்ணிற்காகவும் தம் இன்னுயிரை ஈந்த மாவீரகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் உலகத் தமிழ் அமைப்பு, 2014 நவம்பர் 26 ஆம் நாள் மாவீரர் நாள் வீர வணக்கக் கூட்டம் நடத்தியது.

 

கூட்டழைப்பில் பலர் தொலைப்பேசி மூலம் கலந்துகொண்டனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு. பெ. மணியரசன் அவர்களும், நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையமைச்சர் உயர்திரு. உருத்திரகுமாரன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

 

கூட்டத்தின் தொடக்கத்தில் ஒரு மணித்துளி அமைதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், உலகத் தமிழ் அமைப்பின் செயலாளர் திரு. இரவிக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் திரு. தில்லைக்குமரன் அவர்கள் அறிமுக உரை வழங்கினார். அதையடுத்து உலகத் தமிழ் அமைப்பின் மாவீரர் நாள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. Layout 1

உயர்திரு. உருத்திரகுமாரன் அவர்களின் உரை:

சிங்களப் பௌத்த இனப்படுகொலை அரசு தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளையும், தமிழர்கள் பட்ட துயரங்களையும் பகிர்ந்துகொண்டார். சிங்களப் பேரினவாத அரசு செய்த இனப்படுகொலைக்கு எப்படி உலக அரங்கில் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று விளக்கினார். தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதற்கு வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதைத் தொடர்ந்து நடந்தத் தேர்தலுமே சான்று. புலிகளோ, தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிராபாகரன் அவர்களோ தமிழீழம் வேண்டும் என்று முதன் முதலில் கேட்கவில்லை. அமைதிவழியிலான அரசியல் போராட்டம் தோற்றதினால், ஏற்கனவே மக்கள் அளித்த தமிழீழம்தான் தீர்வெனும் தீர்ப்பினை ஆயுதம் கொண்டு வீரஞ்செரிந்த போரின் மூலம் வென்றெடுக்க வேண்டும் என்று போராட்டத்தை முன்னெடுத்தனர். தமிழினத்தில் சோழன் கரிகாலனுக்குப்பின், இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்துப் பிறந்த மாபெரும் வீரன் மேதகு பிரபாகரன் அவர்கள். மேலும் புலிகள் அமைப்பில் இணைந்து போராடிய அனைத்து வீர மறவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகின்றோம். இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை ஏற்று, அதற்கானத் தீர்வாக தமிழீழ மக்கள் அனைவரிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

திரு. பெ. மணியரசன் அவர்களின் உரை:

இனப்படுகொலைப்போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கும், பொது மக்களுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்தினார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்டத் தீர்மானங்களைப் பற்றியும் அதில் இந்தியா இழைத்த இரண்டகங்களையும் விரிவாகப் பேசினார். மேலும் மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடையோ, அரசியல் வகையிலானத் தடையோ கொண்டுவராமல் இருப்பதையும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை செயலற்றதாகச் செய்வதையும், அவர்கள் இதில் எந்த அக்கரையும் செலுத்தாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேற்குலக நாடுகளைப் பொருத்தவரையில் தனது பொருளாதார நலன்களே அனைத்திலும் முதன்மையானதாக உள்ளது என்றார்.

 

தற்போது இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன். இதில் தமிழ்நாட்டின் முதனைமையான சிக்கல்கள் பலவற்றையும் குறிப்பிட்டு இருந்தீர்கள். அதேபோல அனைத்து புலம்பெயந்த அமைப்புகளும், ஈழத் தமிழர் அமைப்புகளும் தமிழ்நாட்டுக்காக இப்படிப்பட்டத் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். ஈழத் தமிழர் அளவுக்கு இல்லையென்றாலும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் இங்கு போதிய உரிமையோ பாதுகாப்போ இன்றிதான் உள்ளனர். எனவே ஈழத் தமிழர்களின் இன்னல்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து வைத்துள்ளதைப்போல அவர்களுக்காக குரல் கொடுப்பதைப்போல, தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களைப் பற்றியும் ஈழத்தமிழர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும், அதில் போதிய ஆர்வம் செலுத்தி குரல் கொடுக்க வேண்டும். ஒருவர் மட்டுமே குரல் கொடுக்க வேண்டும் என்பது முறையல்ல. ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. தமிழ்நாட்டுத் தமிழர்களும் தன்தீர்வுரிமையின்றி அடிமைகளாக உள்ளனர் என்பதை உணர வேண்டும்.

 

தமிழ் நாட்டின் நிலைமை மேலும் மேலும் சீரழிந்துகொண்டே செல்கின்றது. எடுத்துக்காட்டாக, காவேரி முல்லைப்பெரியாறு உள்ளிட்ட ஆற்றுநீர் சிக்கல்களில் தலைமைநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை அண்டை மாநிலங்கள் மதிக்காததும், அதனைச் செயல்படுத்த வேண்டிய நடுவண் அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும், தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் இழிவுபடுத்துவதாகும்.

 

மலையாளிகளும், மார்வாடிகளும், மற்ற வட இந்தியர்களும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சொத்துக்களை வாங்கி, பல தொழில்களைக் கட்டுப்படுத்துகின்றனர். மேலும் தொடர்ச்சியான வடவர் குடியேற்றத்தால் தமிழ்நாடு இனி தமிழர் நாடு என அழைக்கப்பட முடியாத நிலைக்குப் போய்விடுமோ எனும் அச்சம் நிலவுகின்றது.

 

கருநாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் எசு. எம். கிருட்டிணன் அவர்கள் (பின்னர் இந்தியாவின் அயலுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்) வெளிமாநிலத்தவர் கருநாடகத்தில் வேளாண் நிலங்களை வாங்கத் தடை விதித்து சட்டமியற்றினார். இதேபோல அருணாச்சலப்பிரதேசத்திலும் தடை உள்ளது. மேலும் காசுமீரத்தில் வெளியார் நிலங்களை வாங்கத் தடை உள்ளது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்படி அயலார் படையெடுப்பைத் தடுக்கப் பல சட்டத் திட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும் ஆனால் திமுக, அதிமுக அரசுகள் ஒன்றுமே செய்வதில்லை. அதேபோல தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்களுக்கு உரிமம் அல்லது அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்படுகின்றது.

 

1930 ஆம் ஆண்டு முதல் தமிழர் தலைவர்கள் தனித்தமிழ்நாடுதான் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்தக் கோரிக்கையை திராவிடத் தலைவர்கள் குழப்பித் தமது திராவிட அரசியலுக்காக திராவிட நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழ் தேசியத்திற்கும் தமிழரின் உண்மையானத் தேவைகளையும் உரிமைகளையும் மறுத்ததோடு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தினர். திராவிடத்தால் நாம் இழந்தது பல. நடைமுறைக்கு ஒவ்வாத தோல்வியுற்ற திராவிட அரசியலைக் கைவிட்டுவிட்டு, தமிழ்த்தேசியக் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனும் மாபெரும் விழிப்புணர்வு தற்போது தமிழர்களிடையே எழுந்துள்ளது.

 

உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து ‘தமிழர் அனைத்துலகப் பேரமைப்பு’ ஒன்றை ஏற்படுத்தி, உலகில் வாழும் தமிழர்கள் அனைவரின் உரிமைக்காகவும், நல்வாழ்வுக்காகவும், விடுதலைக்காகவும் (தன்தீர்வுரிமை) தொடர்ந்து பாடுபட வேண்டும்.

 

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் இறைமையுள்ள தனித் தமிழீழம் அமைவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இசுக்காட்லாந்து, கியூபக்கு ஆகிய இடங்களில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும்போது, ஏன் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது? ஏனிந்த இரட்டை நிலைப்பாடு?

 

இந்தியா என்பது ஆரியர்களால் ஆளப்படும் நாடு, தமிழர்களுக்கு என்று தனி நாடு அமைவதை அவர்கள் விரும்பவில்லை. ஆரியர்கள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமில்லை, தமிழ்நாட்டுத் தமிழர்களின் நலனுக்கு எதிராகவும் உள்ளனர். தமிழர்கள் தனித்த அடையாளத்துடன் தனி நாடு படைத்து இயங்கவல்ல தேசிய இனம் என்று கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழருடன் போரிட்டு வரும் ஆரிய ஆளும் வர்கத்துக்குத் தெரியும். வரலாற்றில் அவர்கள் எப்பொழுதுமே தமிழர்க்கு எதிராகத்தான் இருந்துள்ளனர். அது சு.சாமியின் கருத்துக்களைப் படித்தால் புரியும். இவர்தான் பாசக-வின் தடந்தகைக் குழுவின் (strategy committee) தலைவராக உள்ளார்.

 

சிங்களர்களை ஆரியர்களாக இவர்கள் கருதுகின்றனர். இலங்கையைச் சேர்ந்த புத்தமதத் துறவி அனாகரிகா தர்மபாலாவுக்கு இந்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டது ஒரு எடுத்துக்காட்டு. மேலும் இராசபக்சேவுக்கு பாரதரத்னா பரிசை வழங்கவேண்டும் என்றும் சு.சாமி கோரிக்கை வைத்து வருகின்றார்.

 

தமிழர்களின் முறையான உரிமைகளைப் பற்றி புதுதில்லி ஆளும் வர்கத்தினருக்கு நாம் புரியவைக்க வேண்டிய தேவையில்லை ஏனெனில் அது அவர்களுக்கு நன்கு தெரியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களைப் பணிய வைக்க வேண்டும். அதற்கான போராட்டங்களில் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். தேர்தலில் போட்டியிடும் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளை நாம் நம்பியிருக்கக் கூடாது ஏனெனில் அவர்கள் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் கட்சிகளுடன் எந்த நேரத்திலும் கூட்டுவைக்கக் கூடியவர்கள். அனைத்து மக்களையும் திரட்டிப் போராட்டங்களை நடத்துவதுதான் ஒரே வழி. பெருந்திரள் மக்கள் போராட்டங்களை யாராலும் ஒடுக்கிவிட முடியாது. நாம் கருவியேந்திய போராட்டத்தைப் பற்றிப் பேசவில்லை, அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்று திரட்டிப் போராடும் மக்கள் போராட்டமே இன்றையத் தேவை. இது ஒரே நாளில் நடக்கும் என்று கூறவில்லை, ஆனால் திட்டமிட்டுத் தொடர்ச்சியான உழைப்பைச் செலுத்தினால் ஒருநாள் நடக்கும்.

 

ஈழத்தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தமிழர் தலைமையை உருவாக்க வேண்டியத் தேவையுள்ளது. இது மிக மிக முதன்மையானது. இப்படிப்பட்டத் தலைமையில்லை என்றால் நமது கோரிக்கைகளை, விடுதலையை வென்றெடுப்பது சிக்கலானது. ஏனெனில் பல்வேறு வகையான குரல்களும், கோரிக்கைகளும் எழுந்து, அது நமது விடுதலைப்போருக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும். இப்படிப்பட பல்வேறு குரல்களை நான் பல தொலைகாட்சி விவாதங்களிலும், அச்சு ஊடகங்களிலும் காண நேர்கின்றது. இது ஒரு குழுப்ப நிலையை ஏற்படுத்தும்.

 

உரையின் இறுதியில், இப்படிப்பட்டக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, தனது கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறினார். பின்னர் எழுப்பப்பட்ட அனைத்து வினாக்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் விடையளித்தனர். உலகத் தமிழ் அமைப்பின் முன்னாள் தலைவர் முனைவர் திரு. தணி சேரன் அவர்கள் நன்றி உரை வழங்கினார்.

 

பி.கு: தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு. பெ. மணியரசன் அவர்களின் கருத்தைப்போலவே தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு அவர்களும் முன்பு அமெரிக்கப் பயணத்தின்போது, தமிழ்நாட்டுத் தமிழர்களின் சிக்கல்களுக்காக ஈழத்தமிழர்களும் குரல்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.