அமெரிக்க வரைவுத் தீர்மானம் பெருத்த ஏமாற்றம் அளிக்கின்றது !

அமெரிக்க வரைவுத் தீர்மானம் பெருத்த ஏமாற்றம் அளிக்கின்றது !

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் செப். 24 ஆம் நாள் முன்வைக்கப்பட்ட அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம், உலகத் தமிழர்களிடத்தில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளுக்கு முரணாக உள்ளது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கும், இனப்படுகொலைக்கும் பன்னாட்டுப் புலனாய்வு மட்டுமே முறையானத் தீர்வை வழங்க முடியும் என்பது ஒட்டுமொத்தத் தமிழர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. ஆனால் இந்த வரைவுத் தீர்மானத்தில், இலங்கையின் நீதிப் பொறிமுறையின் அடிப்படையில் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்று குறிபிடப்பட்டுள்ளது. இது குற்றமிழைத்தவன், தன்னைத் தானே விசாரித்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல கேலிக்கூத்தாக உள்ளது.

 

மனித உரிமை ஆணையத்தின் பங்கேற்பும்,பொதுநலவாய அமைப்பில் உள்ள நாடுகளின் பங்கேற்பும்இருக்கும் என்பது மட்டுமே சிறிது ஆறுதல் அளிக்கக் கூடியதாக உள்ளது. எனினும் அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் மட்டுமே புலனாய்வு செய்யவும், வழக்காடவும் முடியும் என்கின்றதேவொழிய, இந்த அதிகாரம் வழங்கும் அமைப்பு எது என்பதைப்பற்றியத் தெளிவு இல்லை.

 

பல ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, அயர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ, அர்சென்டைனா ஆகிய நாடுகள் தீர்மானத்தை வலிமையாக்க வேண்டும் என்று முறைசாரா கலந்துரையாடலில் குரல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. அதேநேரம் பாக்கிசுத்தான், சீனா, கியூபா, இரசியா ஆகியவை இத்தீர்மானத்திற்குத் தடையாக இருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது, இந்த முன்னெடுப்பில் வெறும் பார்வையாளராக இந்திய அரசு இருப்பதையும் கண்டிக்கின்றோம்.

 

இலங்கையில் பன்னாட்டுப் புலனாய்வு ஐ.நா. தலைமையில் நடைபெற வேண்டும், அதற்கு இந்தியா தனது அதிகாரத்தையம், அழுத்தங்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாட்டின் முதல்வர் உயர்திரு செல்வி செ. செயலலிதா அவர்களுக்கும், இருமுறை ஒருமனதாக நிறைவேற்ற உதவிய மற்ற அரசியல் கட்சிகளுக்கும் உலகத் தமிழ் அமைப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. ஈழத் தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் செயலில் ஈடுபட இந்தியாவிற்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. அதனை முறையாகப் பயன்படுத்தி, தமிழர்களை இலங்கை அரசு ஏமாற்றாமல் இருக்குமாறு செய்ய வேண்டும். இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் நாட்டு மக்களின் வரியால் வளமூட்டப்படும் இந்திய அரசு, தமிழர்களின் கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டும்.

 

உலகம் முழுதும் உள்ள தமிழ் மக்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் உலகத் தமிழ் அமைப்பு தனது கூட்டுப்பொறுப்புணர்வையும், நட்புணர்வையும் வெளிப்படுத்துகின்றது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு, மக்களாட்சி முறைப்படி அறவழியில் நமது கோரிக்கைகளைத் தொடர்ந்து அயராது முன்னெடுத்துச் சென்று,நமக்கான சமஉரிமையையும் நீதியையும் வென்றெடுப்பொம்.

 

அன்புடன்,

முனைவர் வை. க. தேவ்

தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

அமெரிக்கா, 26-செப்.-2015