கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக முதல்வர் அவர்களுக்கு உலகத் தமிழ் அமைப்பின் கோரிக்கை

மாண்புமிகு முதல்வர் உயர்திரு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம் !

 

உலகத் தமிழ் அமைப்பு 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிறுவப்பட்டது. உலகளாவிய தமிழர்களின் அடிப்படை உரிமைகள், நீதி – நலன்களைப் பாதுகாப்பது, முன்னெடுப்பது, மீட்டெடுப்பது ஆகியவற்றின் பொருட்டுக் கடந்த 33 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றது.

 

அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர் என்ற செய்திகேட்டு உலகத் தமிழர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். தாங்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்தம் கருத்துக்களை உள்வாங்கி தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தி ஏழை எளிய மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.

 

இளைஞர்கள் மிகுதியாகக் குடிப்பதால் மதுமயக்கம், தலைவலி ஏற்படுவதோடு, போதைக்கு முழுமையாக அடிமையாகின்றனர். அளவுகடந்த தொடர் போதைப் பழக்கத்தால் கை கால் நடுக்கம், வியர்த்தல், மன நடுக்கம் ஏற்படுவதோடு குடித்தால்தான் வாழமுடியும் என்ற நிலை ஏற்பட்டு, இளமையிலேயே சாவைத் தழுவுகின்றனர். குடி போதையில் கடமைகளையும், பணியையும் செய்ய முடியாமல் குடும்பத்தினர், நண்பர்களிடம் சண்டை போடுகின்றனர். குடி போதையில் ஈருருளி, மகிழுந்து ஆகியவற்றைக் கட்டுப்பாடில்லாமல் ஓட்டுவதால், அப்பாவிப் பொதுமக்களும் நேர்ச்சியில் இறக்கின்றனர். இதனால் இளம் விதவைகள் தமிழ்நாட்டில் மிகுதியாகின்றனர், பல குழந்தைகளின் எதிர்காலம் இருளாகின்றது. எனவே தாங்கள் உடனடியாகத் தலையிட்டு மது உற்பத்தி நிறுவனங்களையும், அரசு மதுக்கடைகளையும், பல்லாயிரக்கணக்கான தனியார் மதுக்கூடங்களையும் மூடவேண்டும்.

 

திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை வலியுறுத்துகின்றார். “கள்” குடிப்பதை உலகத் தமிழ் அமைப்பும் ஊக்குவிக்கவில்லை ஆனால் ஏற்கனவே சாராய போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கவும், உடல் – குமுகத் தீங்கை மட்டுப்படுத்தவும், கள்ளை மாற்றாக முன்வைக்கின்றோம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 47 ஆவது பிரிவின்படி, கள் உணவுப்பொருள் பட்டியலில் உள்ளதாகவும், அதனை போதை மது வகையில் சேர்க்க முடியாது என்றும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயா நல்லசாமி அவர்கள் வலியுறுத்தி வருகின்றார். கள் விற்பனையை அரசே எடுத்து நடத்தினால் அல்லது அனுமதித்தால் உழவர்களுக்கும் பயனளிக்கும் – உள்ளூர் பொருளாதாரத்தையும் பாதுகாக்கமுடியும் என்றும், உலக அளவில் 108 நாடுகளில் கள் பயன்பாட்டில் உள்ளது என்றும், தமிழ்நாட்டைச் சுற்றியிருக்கும் எல்லா மாநிலங்களிலும் கள் உண்டு என்றும், ஆனால் தமிழ்நாட்டு அரசு உணவுவகையில் ஒன்றான கள்ளைத் தடை செய்துவிட்டு சாராய போதைக்கு மக்களை நிரந்தர அடிமையாக்கி வருகின்றது என்றும் குற்றம்சாட்டுகின்றார்.

 

தமிழரின் பாரம்பரிய மருத்துவமுறையான சித்த மருத்துவம் கள்ளின் வகைகள் & மருத்துவத் தன்மைகளைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. கேரளாவில் மதுக்கொள்கை & மதுவிலக்கு தொடர்பாக நியமிக்கப்பட்ட உதயபானு ஆணையத்தின் அறிக்கையில், “கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி” என பரிந்துரை அளித்துள்ளதை இங்கே சுட்டிக்காட்டுகின்றோம்.

 

2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது “கள் இறக்குவது தொடர்பான உழவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என தாங்கள் தெரிவித்தீர்கள். அதற்கேற்ப “நீதிபதி சிவசுப்பிரமணியன்” அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு அளித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற அடிப்படையில் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, உலகத் தமிழர்களின் சார்பாக நாங்கள் முன்வைக்கும் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

 

அன்புடன்,

இராசரத்தினம் குணநாதன்

தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

சூன் 29, 2024