“தமிழர் உரிமைகளை வென்றெடுப்போம்”, உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாட்டு அறைகூவல்!

தமிழர் உரிமைகளை வென்றெடுப்போம்”, உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாட்டு அறைகூவல்!

அமெரிக்காவில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து தமிழர் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் 1991 ஆம் ஆண்டு சிகாகோ நகரில் உருவானது “உலகத் தமிழ் அமைப்பு”. தமிழர் தாயகங்களில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் உருவான இந்த அமைப்பு உலகமெங்கும் வாழும் தமிழர் நலனுக்காக இரண்டு தலைமுறைகளாக கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து வருகின்றது. “தமிழ் மொழி, தமிழர் நலன், தமிழர் உரிமை” ஒன்றே இதன் முழக்கம். இதன் வெள்ளி விழா நிகழ்வு கடந்த 08 அக்டோபர் 2016 விர்சீனியாவில் உள்ள ஆல்டி பகுதியில் நடைபெற்றது.

image001

அமெரிக்க மண்ணில் பிறந்து இங்குள்ள தமிழ் பள்ளிகளில் பயின்ற  தமிழ் குழந்தைகளின் தமிழ்த் தாய் வாழ்த்து பண்ணுடன் நிகழ்வை தொடக்கி வைத்தனர்.  தமிழர்களின் உரிமைக்காகவும், அயல்மொழித் திணிப்பில் இருந்து தமிழ் மொழி காக்கவும் போராடி தன் இன்னுயிரை ஈகம் செய்த தமிழீழ, தமிழக மாவீரர்கள், ஈகியர்களுக்கு விழாவில் கூடியிருந்தவர்கள் அனைவரும் அமைதி அஞ்சலி செலுத்தினர். சிறப்பு அழைப்பாளார்கள் குத்துவிளக்கேற்ற, உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் ஐயா. வைத்தியலிங்கம் க. தேவ் அவர்களின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. விழா ஒருங்கிணைப்பாளர் திரு இரவி சுப்ரமணியம் அவர்கள் மாநாட்டு முன்னோட்டம் குறித்து விளக்கினார். வட அமெரிக்கத் தமிழச் சங்கப் பேரவையின் தலைவர் திருமதி செந்தாமரை பிரபாகர், தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் திரு. சிவசைலம் தெய்வமணி, அமெரிக்கத் தமிழர் அரசியற் செயலவையின் சார்பாக திரு. எலியாசு அவர்களும் வெள்ளி விழா காணும் உலகத் தமிழ் அமைப்பின் வரலாற்றையும் பணிகளையும் நினைவுகூர்ந்து வாழ்த்துரை வழங்கினர். புரட்சிக்கவி பாரதிதாசன் “சங்கே முழங்கு”, “தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்புவோம்” பாடல்களுக்கு தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் எழுச்சி நடனத்துடன் தொடக்க நிகழ்வு நிறைவுற்றது.

image002

“தாய்மொழி பாதுகாப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் அமர்வில் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் கானொளிப் பதிவு வழியாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். 1938, 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து தொடரும் இந்தி, சமற்கிருத திணிப்பில் இருந்து தமிழ் மொழியை பாதுகாக்க தற்கால சூழலில் இந்தியத் துணைக்கண்டத்தில் வங்காளம், கர்நாடகம், பஞ்சாபி உள்ளிட்ட மொழி பேசும் தேசிய இன மக்களுடன் இணைந்து தமிழர்கள் போராட வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

“தந்தைப் பெரியார் கண்ட சமூகப் பணிகளின் தேவைகள்” என்ற தலைப்பில் இன்றைய தலைமுறையினருக்கு குறிப்பாக பெண் விடுதலைக்கு தந்தைப் பெரியாரின் கருத்தியல் தேவையை வலியுறுத்தி திருமதி கிளாரா ஆர்தர் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். உலகமெங்கும் பல நாடுகளில் தங்கள் மக்களின் உரிமைகளுக்காக போராடிய காந்தி, மார்த்தின் இலூதர் கிங் போன்ற மக்கள் தலைவர்களை அந்நாட்டு மக்கள் நினைவுகூறுகின்றனர், அதைப் போல தமிழர்களும் நமது இன்றைய தலைமுறையினரும் பெரியாரை தொடர்ந்து நினைவு கூர்ந்து அவரது கருத்துக்களை உள்வாங்க வேண்டும் என வலியுறுத்தினார். “ஈழத்தில் இன்றைய நிலைமை” குறித்து உரையாற்றிய “பெர்ல்” அமைப்பைச் சேர்ந்த திருமதி டாசா மனோரஞ்சன் அவர்கள் போர் முடிந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பல்வேறு வழியில் தொடர்வதாக குறிப்பிட்டார். இராணுவ ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை, கோயில்களை இடித்து புத்த விகாரைகளை நிறுவுதல் என அடக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் தொடர்வதை விளக்கினார். ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழ் இனஅழிப்பு குற்றத்திற்கு நீதிகோரி பல்வேறு உலகநாடுகளின் தலைவர்களுடனும், ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் அலுவலர்களோடும் இணைந்து தமிழ் மக்களின் நீதிக்காக செயல்படுவதை குறிப்பிட்டார். அண்மையில் ஈழத்தில் தமிழ் மக்கள் பெருந்திரளாக சனநாயக வழியில் கலந்து கொண்ட “எழுக தமிழ்” மக்கள் எழுச்சிப் பேரணிக்கு எதிராக சிங்களவர்கள் மத்தியில் தோன்றியுள்ள எதிர்ப்பு தொடரும் சிங்களப் பேரினவாத மனநிலையை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டார்.

image003

“தமிழ் கணினி” என்ற தலைப்பில் கணினிப் பொறியாளர் திரு இளங்கோ சேரன் அவர்கள் உரையாற்றினார். தமிழ் மொழியை எதிர்கால பயன்பாட்டிற்கு உறுதி செய்ய இணைய ஊடகத்தில் தமிழ் மொழி பயண்பாடு எளிமையாக்கப்படுவதை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதை நடைமுறைப்படுத்த கணினி அறிவியல் துறை சார்ந்த புதிய தமிழ்ச் சொற்களை கொண்ட அதிகாரப்பூர்வமாக அகராதியை வெளியிட தமிழறிஞர்கள் உதவியுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மென்பொருள் எழுதும் கணினி மொழியை தமிழ் மொழியில் நடைமுறைப்படுத்துவது, இணைய ஊடகத்தில் புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்ப்படுத்துவது, தமிழ் மொழிக் கல்வி கற்க தனியான தமிழ் தொலைக்காட்சி உருவாக்குவது உள்ளிட்ட ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார்.

image004

“நடுவண் அரசின் புதிய கல்விக்கொள்கை” என்ற தலைப்பில் இந்திய நடுவண் அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள முன்மொழிவுகள் குறித்து மருத்துவர். சோம. இளங்கோவன், திரு. இளங்கோவன் சந்தானம், திரு. செல்வன் பச்சமுத்து ஆகியோர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இந்தியாவை பொறுத்தவரை மாநிலங்கள் அதிகாரங்களுக்கான பட்டியலில் இருந்த ‘கல்வி’ நெருக்கடி நிலை காலகட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் “பொது பட்டியலுக்கு” நகர்த்தப்பட்டது. தற்பொழுது மத்தியில் ஆளும் பாரதிய சனதா கட்சி தனது புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வியை நடுவண் அரசின் அதிகாரப்பட்டியலில் சேர்க்கவும் உயர்கல்வியில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவும் வழிவகுக்கம் திட்டமே என விளக்கினர். தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் சமச்சீர் கல்வித் திட்டத்தை அழித்து, தமிழ் வழிக் கல்விக்கு எதிராக அயல்மொழித் திணிப்பை வலியுறுத்துத்தும் இந்த புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயல்வது தடுக்கப்பட வேண்டும் எனவும், கல்வி மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

image005

தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு காலத்தில், தனித் தமிழ் இயக்கப் பணிகளை எவ்வாறு எடுத்துச் செல்வது என திரு. செ.முத்துசாமி, தலைவர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, திரு. கோ. இளவழகன், தமிழ்மண் பதிப்பகம், திரு. இராசாமணி எழிலரசன், தமிழ் “ழகரப்” பணிமன்றம் ஆகியோர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தில் மிகச் சரளமாக ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுவது பெருகி வருவதும், தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களின் பள்ளிகள் தமிழில் பேசினால் மாணவர்கள் தண்டம் கட்ட வேண்டும் என்ற மிகமோசமான நடைமுறையும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என செ.முத்துசாமி குறிப்பிட்டார். தனித் தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகளாரின் அருந்தொண்டை நினைவுகூர்ந்த ஐயா. கோ. இளவழகன் அவர்கள், “திருமண அழைப்பிதழில் ஆங்கில தலைப்பெழுத்து பயன்பாடு என தமிழர்கள் இன்றும் முழுமையாக தனித்தமிழை நடைமுறைப்படுத்தாத சூழலே நிலவுகின்றது,  தாய்மொழியை புறந்தள்ளி எந்த நாடு இனமும் வாழ்ந்ததில்ல்லை என்ற வரலாற்று உண்மையை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்கும் மாணவர்களிடம் தனித் தமிழ் பாவிக்கும் பாடத்தையும், தமிழ் மொழி பலுக்கும் முறையையும் பல ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்டு வருவதையும் “தமிங்கிலம்” நீக்கப்பட்டு அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வியல் கடமைகளில் தனித் தமிழ் பயன்பாட்டை கடைபிடிக்க உறுதியேற்க வேண்டும் என திரு. இராசாமணி எழிலரசன் வலியுறுத்தினார்.

image006

“பறிபோன, பறிபோகும் தமிழர் உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றிய திரு. திருச்சோதி அவர்கள் “நைசிரியாவில் உள்ள பையாவ்ரா மக்கள் போல தங்கள் இன விடுதலைக்காக போராடி அழிவை சந்தித்து  பல தேசிய இனங்கள் இந்த உலகத்தால் மறக்கப்பட்ட இனமாக மாறிவருகின்றன. இந்த சூழலில் குர்து, பாலசுதீன மற்றும் தமிழ் மக்களாகிய நாமும் நம் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசத்தின் விவாதப் பொருளாக மாற்றி தொடர்ந்து போராடி வருகின்றோம். இது முள்ளிவாய்க்கலோடு தமிழர்களின் போராட்டம் முடியவில்லை எமது போராட்டத்தை அனைத்துலக அளவில் முன்னெடுத்து வருகின்றோம் என்ற செய்தியை உலகுக்கு தெரிவிக்கின்றது. ஐ.நா விசாரணை அறிக்கைகள் தமிழர்களை ஒரு இனமாக அங்கீகரிக்க மறுக்கின்றது. இதை மாற்ற நாம் தமிழர்கள் ஒரு இனமாக சிந்திக்க வேண்டியுள்ளது, உலகம் நம்மை ஒரு இனமாக அங்கீகரிக்க நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். தமிழீழ மக்கள் விடுதலை அடைய வேண்டிய ஒரு முக்கிய காலகட்டத்தில் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம், இந்த காலத்தில் நாம் விடுதலையை அடைய நமது வேறுபாடுகளை களைந்து தொடர்ந்து போராட வேண்டும்” எனக் கூறினார்.

image007

உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்விற்கு வாழ்த்துகளை தெரிவித்து நாடுகடந்த தமிழீழ அரசின் முதன்மை அமைச்சர் திரு உருத்திரகுமாரன் அவர்கள் ஆற்றிய உரையில்,

“மே 2009 முள்ளிவாய்க்காலில் மனித குலத்திற்கு விரோதமாகவும், அனைத்து உலக சட்டங்களுக்கு விரோதமாகவும் எம்மக்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டார்கள். இந்த இனஅழிப்பு தமிழீழ மக்களுக்கு இருந்த அரசியல் வலுவையும் சேர்த்து அழித்துவிட்டது. அதேவேளை முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தனித் தமிழீழத்திற்கான தேவையை மேலும் வலுப்படுத்தியது. அரசியல் வன்வலுவை இழந்த நாம் இன்று எமது மென்வலு மூலம் தமிழீழ மக்களின் போராட்டத்தை உலகம் தழுவிய போராட்டமாக தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.

image008

நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கம் தமிழர்களின் விடுதலை வேட்கையை வீழ்த்தமுடியாது என்ற செய்தியை இலங்கை அரசிற்கும் உலக நாடுகளுக்கும் அறிவித்தது. வன் வலுவை நாம் இழந்தாலும் எமக்கிருக்கும் மென் வலுவை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதுவே “நாடு கடந்த தமிழீழ அரசின்” மூலம் எமது விடுதலைக்கான போராடத்தை பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகும். 2013 ஆம் ஆண்டு  சார்பாக தமிழீழ விடுதலை சாசனத்தை வெளியிட்டோம், அனைத்துலக விசாரணை கோரி ஒரு மில்லியன் கையெழுத்து பரப்புரையை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்தோம். அடுத்ததாக இலங்கை அரசின் 6 ஆவது சட்டத் திருத்தம் நாட்டில் பேச்சுரிமை, கருத்துரிமையை பறிக்கின்றது என்பதை அம்பலப்படுத்தி ஐ.நா மன்றத்தில் சட்டதரணிகள் மூலம் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம். இலங்கை அரசு புதிய அரசமைப்பு கொண்டுவர உள்ள சூழலில் தமிழர்கள் தரப்பில் இருந்து ஒரு அரசமைப்பு யாப்பை நாங்கள் வெளியிட உள்ளோம்.

இன்று எங்களது தேசியப் பிரச்சனை இந்தியப் பெருங்கடல் சார் புவிசார் அரசியல் பிரச்சனையுடன் இரண்டாக கலந்துள்ளது. தற்பொழுது எமது சவால் அரசியல் முதன்மைத்துவம் வாய்ந்த எமது தாயகத்தின் இருப்பிடத்தை எவ்வாறு எமது விடுதலைக்கு ஆதரவாக நாம் பயன்படுத்துவது என்ற மூலோபாயத்தை வகுக்க வேண்டியவர்களாக உள்ளோம். இந்த புவிசார் அரசியல் முதன்மைத்துவத்தின் அடிப்படையில் தான் இன்று மேற்குலகம் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. சிரிசேனா தலைமையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் இராசபக்சே நடத்திய இன அழிப்பு போர் வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. சிரிசேனா அரசாங்கம் நல்லாட்சி என்ற “மாய மானை” ஏவிவிட்டுள்ளது. இந்த மாய மானை நம்பி சில ஐரோப்பிய நாடுகளும், எமது தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரும் பின்செல்கின்றனர். இராணுவமயமாக்கல், காணி பறிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை மறுப்பு, பாலகுமாரன் உள்ளிட்ட சரணடைந்த போராளிகளின் நிலை தெரியவில்லை என ஆட்சி மாற்றத்தால் தமிழர்கள் வாழ்வில் எந்த மாற்றமும் வரவில்லை என்பது தான் இன்றைய எதார்த்தம்.

image009

நாடுகடந்த தமிழீழ அரசு இரண்டு போராட்டங்களை முன்னெடுக்கின்றது. பொறுப்புகூரல். இன அழிப்புக்கு நீதி கிடைக்க வேண்டும், இந்த நீதி எமது போராட்டத்தின் அரசியல் தீர்வுக்கு ஆதாரமாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. இன்று நாம் கோரிய சர்வதேச விசாரணை ஒரு “கலப்பு” விசாராணை என்ற அளவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த “கலப்பு” விசாரணை நீதியை பெற்றுத் தராது என்பதை நிறுவ “பொறுப்புக்கூரல் கண்கானிப்புக் குழு” என்ற சர்வதேச சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்றை நாங்கள் நிறுவியுள்ளோம். இன அழிப்பு விசாரணை கோரும் அதே வேலை ஈழத் தமிழர்களுக்கான அரசியல் விடுதலைக்கு பொதுவாக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற பரப்புரையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். இதற்காக தென் சூடான் உள்ளிட்ட நாடுகளிடம் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பிற்கு ஆதரவு கோரி வருகின்றோம். பொதுவாக்கெடுப்பை சாத்தியமாக்க தமிழ் அமைப்புகள் நாம் அனைவரும்  ஒன்றிணைந்து இக்கோரிக்கையை முன்னெடுத்து வெற்றிபெற வேண்டும் என அழைப்புவிடுக்கின்றோம்.

இன அழிப்பு, பொதுவாக்கெடுப்பு தொடர்பான வேலைகளோடு தமிழர்களின் நீண்டகால தேவைக்கான அரசியல், பண்பாட்டு ஆய்வு மற்றும் செயல்பாட்டு நிறுவனங்களை உருவாக்க நா.க.த.அ சார்பாக திட்டமிட்டு வருகின்றோம். ஈழத் தமிழர்களின் விடுதலை குறித்து பேசும் பொழுது இந்தியாவின் நிலைப்பாடு என்ன என சர்வதேச தலைவர்கள் பலரும் வினவுகின்றனர். முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தம் தமிழர்களுக்கு எதிரான யுத்தம் அல்ல இந்தியாவிற்கு எதிரான யுத்தம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு இந்தியாவின் நிலைப்பாட்டை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்ற வேண்டியது தாய்த் தமிழக உறவுகளின் பங்கு மிக முதன்மையானது. மலரும் தமிழீழம் தமிழீழ மக்களோடு தாய்த் தமிழக மக்களின் உலகமெல்லாம் பரவியுள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் அரசாக அமையும்.  எனவே உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலையை வெல்வோம் அதற்கான ஆன்ம பலத்தை எமது மாவீரர்கள் எமக்கு அளிப்பார்கள்” என்றார்.

image010

தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த “தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின்” தலைவர் திரு. பெ. மணியரசன் அவர்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தாய்மொழித் தமிழை நெஞ்சில் நெருப்புச்சுடராக ஏந்தி இன உணர்வோடு  செயல்பட்டு வரும் “உலகத் தமிழ் அமைப்பை” வெற்றிகரமாக நடத்தி வரும் பெருமக்களுக்கு தனது பாராட்டுக்களையும், தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழீழம் பற்றியும் மிகுந்த பொறுப்புணர்வோடும்  அக்கறையோடும் சிந்திக்கும் உலகத் தமிழ் அமைப்பு உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருக்கும் தங்களைப் போன்ற களப்பணியாளர்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியவையாக உள்ளது எனத் தொடங்கி ஆற்றிய சிறப்புரையின் சாரம்,

“ஏழரைக் கோடி தமிழர்கள் இருந்தாலும்கூட, இந்தியாவில் நாம் “சிறுபான்மையினர்” என்கிறார்கள். அதைவிட குறைவான மக்கள் தொகைக் கொண்டது பிரித்தானியா! அதுபோல், தமிழ்நாட்டைவிடக் குறைவான மக்கள் தொகை கொண்டது பிரான்சு! இத்தாலி, இசுரேல், நார்வே என பல நாடுகள் தமிழ்நாட்டைவிட மிகக் குறைவான மக்கள் தொகை கொண்டவை! ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்தியாவில் “சிறுபான்மை” என்கிறார்கள். எப்படி நாம் சிறுபான்மையினர் ஆனோம்? நாம் இந்தியாவில் இணைக்கப்பட்டதால் செயற்கையாக சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளோம்!

image011

இந்தியா தொடர்ந்து, பல சிக்கல்களில் தமிழர்களுக்கு நடுநிலை தவறி அநீதி இழைக்கிறது. நீதி வழங்க மறுக்கிறது. காவிரிச் சிக்கலில் இது அப்பட்டமாகத் தெரிந்தது.

எனவேதான், தமிழீழத் தமிழர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்தியாவை நம்பாதீர்கள். எப்படியாவது இந்தியாவுக்கு “தமிழீழம்” பற்றிப் புரிய வைத்துவிடலாம் என்று கனவு காணாதீர்கள்! காளை மாடு கன்று போட்டாலும் போடும், இந்தியா தமிழர்களுக்கு ஆதரவாக – தமிழர் ஞாயத்திற்கு ஆதரவாக வராது! இதுவே நமக்கான படிப்பினை!

இவ்வளவு பெரும் இழப்புகளுக்குப் பிறகும் இந்தியாவை நாம் நம்பக் கூடாது. எனவே, தமிழீழத்தமிழர்கள் சிந்தித்து மாற்றுப் பாதைக்கு வாருங்கள். இந்தியாவுக்கு புரிய வைக்க முடியாது. இந்தியாவைப் பணிய வைக்கத்தான் முடியும். இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து, நெருக்குதல் கொடுத்து, நீதிக்குத் தலைவணங்கச் செய்ய வேண்டும். அந்த ஆற்றல், தமிழ்நாட்டிலுள்ள ஏழரைக் கோடி தமிழ் மக்களுக்குத்தான் இருக்கிறது.

image012

தமிழர்களுக்கு ஒரு நாடல்ல, இரண்டு நாடுகள் இருக்கின்றன. ஒன்று தமிழ்நாடு, இன்னொன்று தமிழீழம். தமிழ்ஈழம் விடுதலையடையும் தருவாயில் இருக்கிறது, தமிழ்நாடு அப்படியில்லை என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை! எது முந்தும் எது பிந்தும் என வரலாற்றில் சொல்ல முடியாது. சோவியத்து ஒன்றியம், 15 நாடுகளாகப் பிரிந்த போது, ஆயுதப் போராட்டங்கள் நடக்கவில்லை. மேசையில் பேச்சு நடத்தி செக்கோசுலோவேகியா இரண்டாகப் பிரிந்தது. எனவே, அரசியல் காய் நகர்த்தல்களால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

எனவே, இது முந்தி – இது பிந்தி என சோதிடம் கூறிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனச் செயல்படுங்கள்!

2009ஆம் ஆண்டு, தமிழீழத்தில் போர் நிறுத்தம் கொண்டு வர தமிழ்நாட்டுத் தமிழர்களால் முடியவில்லை. போர் நிறுத்தப் போராட்டம், தமிழ்நாட்டில் வெகு மக்கள் எழுச்சியாக வளரவில்லை. உரிய ஆற்றலுடன் பெருந்திரளாக வெகு மக்கள் வீதிக்கு வந்து குரல் கொடுக்கவில்லை.

நாங்கள், தோழர் கொளத்தூர் மணி, தோழர் கோவை இராமகிருட்டிணன், தோழர் தியாகு ஆகியோர் தலைமையிலான அமைப்புகள் “தமிழர் ஒருங்கிணைப்பு” என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி, தஞ்சையிலே இந்திய அரசின்  விமானப்படைத்தளத்தை முற்றுகையிட்டோம். தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசுக்கு வரி செலுத்தும் வருமானவரி அலுவலகங்களை, சுங்கவரி அலுவலகங்களை முற்றுகையிட்டோம். விமானப் படைத்தள முற்றுகைப் போராட்டத்தில், அன்றைக்கு எங்களுக்கிருந்த ஆற்றலுக்கேற்ப, 350 தோழர்கள் கைது செய்யப்பட்டோம். 500 பேர் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆனால், ஒரு வார காலம், இந்திய அரசு அலுவலகங்களைப் பல்லாயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் திரண்டு முற்றுகையிட்டு, அவை செயல்படாத வகையில் முடக்கியிருந்தால், இந்தியாவுக்கு ஒரு நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். தமிழீழம் விடுதலையாவதற்கு முன், தமிழ்நாடு விடுதலையாகிவிடும் போலிருக்கிறது என அச்சப்பட்டுக் கொண்டாவது, போர் நிறுத்தத்தை இந்திய அரசு கொண்டு வந்திருக்கும்.

image013

எனவே, நாம் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் ஆற்றலாக வளர வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஆற்றலைப் பெருக்க வேண்டும். தமிழ்த்தேசிய எழுச்சியை உருவாக்க வேண்டும்!

இவர் தலைமை – அவர் தலைமை என்றில்லாமல், புதிய தலைமைகள் பிறக்க வேண்டும். புதிய தமிழ் இளைஞர்கள் வர வேண்டும். இளைஞர்கள் பின்பற்ற மட்டுமல்ல, வழிகாட்டவும் உரிமையுள்ளவர்கள் என்பதை மறக்கக்கூடாது!

இளைஞர்களே !இவர் சொன்னார்,அவர் சென்னார் என்று கேட்பது மட்டும் உங்கள் வேலையல்ல. நீங்கள் முடிவெடுங்கள்; நீங்கள் வழிகாட்டுங்கள்! துணிந்து வாருங்கள்! நுகர்வு வாதத்தை விட்டு வெளியே வாருங்கள்! மனக்குகையிலிருந்து வெளியே வாருங்கள்! உங்கள் நெஞ்சில் பற்றியெரியும் உரிமைத் தீதான் வெளியேயும் பற்றும் என உணர்ந்து, வெளியே வாருங்கள்! ஒரு தனி மனிதரிடமிருந்துதான் புரட்சி பிறக்கிறது. ஒரு அகல் விளக்கிலிருந்து ஆயிரம் விளக்குகள் ஒளியேற்றிக் கொள்ள முடியும்! களப்போராட்டங்களில் கலந்து கொள்வோர் வருக! கருத்துகளைப் பரப்ப உதவுவோர் வருக! நிதி வழங்க முடிந்தோர், நிதி தாருங்கள்! யார் யார் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்யுங்கள்! செயல்பட்டுக் கொண்டே இருங்கள்! நாம் வெற்றி பெறுவோம்!

மனித மனம், எப்பொழுதும் அற்ப ஆசைகளையும், இலேசான விடயங்களையும்தான்  நாடும். அது இயற்கையானது. உயர்ந்த எண்ணங்களுக்கு நாம் அதைத் திருப்பி விட வேண்டும்.

image014

ஒரு குழந்தைக்கு நெய்யும் பருப்பும் கலந்து சோறு கொடுக்கத் தாய் போராடுவாள்! ஆனால், ஐசுகிரீமைப் பார்த்தால், அந்தக் குழந்தை அதை நோக்கித் தாவி ஓடும்! அதுதான் மனித  மனம்! எனவே, இலட்சியத்தை நோக்கி மனத்தை செலுத்த வேண்டும். அப்படி செலுத்துவோர் தான் சிந்தனையாளர்களாக – போராளிகளாக வரலாற்று நாயகர்களாக உருவாகிறார்கள். புரட்சியில் எப்பொழுதும் 100 விழுக்காட்டு மக்கள் பங்கு கொள்வதில்லை. 50 விழுக்காட்டு மக்கள் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்று தங்கள் வேலையைப் பார்ப்பார்கள். வெறும் 25 விழுக்காட்டு மக்கள் உறுதியான ஆதரவோடு பங்கேற்றால் போதும், நாம் வெற்றி பெறலாம்! அதற்குரிய வழிகளில் அவர்களைத் திரட்ட வேண்டும்.

தமிழீழம் போல், தமிழ்நாட்டில் ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இங்கு அது பலன் தராது. அச்சப்பட்டுக் கொண்டல்ல, தமிழ்நாட்டுச் சூழல் வேறு! தமிழீழச் சூழல் வேறு! தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சி – தேர்தல் ஆசையற்ற அறவழிப் போராட்ட எழுச்சி உருவாக வேண்டும். பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இளைஞர்களைத் திரட்ட வேண்டும்! வாழ்ந்த தமிழினம், வீழ்ந்து கிடக்கிறது! உலகின் முதற்செம்மொழி சொந்த மக்களாலேயே புறக்கணிக்கப்படும் அவலம் நடக்கிறது. இவற்றையெல்லாம் கண்டு நாம் கொதித்தெழ வேண்டும்! ஆக்க வழிப்பட்ட மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இளம் தலைமையே எழுந்து வா!

நாம் யாருக்கு எந்த இனத்திற்கு என்ன தீங்கு செய்தோம்? நமக்கு ஏன் இப்படி இழப்புக்கு மேல் இழப்புகள் வருகின்றன? இந்தியா, இன்று வாழ்கிற நம்மை பார்த்து அச்சப்படவில்லை. நம் வரலாறும் மொழியும் அவர்களுக்கு அச்சத்தைத் தருகிறது. இடைக்காலத்தில் எத்தனை சந்தர்ப்பவாதிகள் வந்தாலும், இந்த இனம் பிரபாகரன்களை உருவாக்கிவிடும் ஆற்றல் மிக்கது என எதிரிகள் அறிந்துள்ளார்கள். எனவே, அவர்கள் அச்சப்படுகிறார்கள்! எனவேதான் நாம் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப்படுகிறோம்! எத்தனை அயல்மொழி ஆதிக்கம் செய்ய வந்தாலும் தமிழை அழிக்க முடியாது. வரலாற்றில் அது மீண்டும் மீண்டும் வீறு கொண்டு எழுந்துள்ளது!

image015

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் – மங்காத தமிழென்று சங்கே முழங்கு! இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!” என புரட்சிப் பாவலர் பாரதிதாசன் பாடினார். இவ்வரிகள் வெறும் மொழி வாழ்த்தல்ல! பாராட்டு வரிகள் அல்ல! ஆழந்த பொருள் கொண்டவை. தமிழ் வாழ்ந்தால்தான் தமிழினம் வாழும், தமிழர் தாயகம் நிலைத்திருக்கும். தமிழ் அழிந்தால் தமிழினம் சிதறும்; தமிழர் தாயகம் பறிபோகும்; அயலாரிடம் அண்டிப்பிழைக்கும் உதிரிகளாகச் சொந்த மண்ணிலேயே தமிழர்கள் மாறி விடுவார்கள் என்ற பொருளில்தான் பாவேந்தர் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்” என்றார்!

அவரே தான், “இனத்தைச் செய்தது மொழிதான்! இனத்தின் மனத்தை செய்தது மொழிதான்!” என்றும் பாடினார். ஒரு தேசிய இனத்தின் உளவியல் உருவாக்கம் – அதாவது நாமெல்லாம் ஓரினம் என்ற உறவு உருவாக்கம் (We Feeling) மொழி வழியாக நடப்பதை பல ஆய்வாளர்கள் கூறினார்கள். பாவேந்தர் பாரதிதாசன் இதைத் தன் வழியில் சிந்தித்துப் பாடினார்.

எனவே, நம் மொழி நம்மை இணைக்கிறது. அமெரிக்க மண்ணிலே புலம் பெயர்ந்த வாழும் தமிழர்கள் இந்தக் கருத்துகளை நீங்கள் பேசுங்கள்.

அமெரிக்க நாடு கருணையினால் கதவு திறந்து உங்களை அழைத்துக் கொள்ளவில்லை. உங்களின் அறிவாற்றல், செயல்திறன், உழைப்பு அனைத்தும் தேவை என்று கருதி, உங்கள் தகுதியறிந்து, ஆயிரம் சோதனைகளுக்குப் பிறகு உங்களை அழைத்திருக்கிறது. உங்கள் அலுவலகக் கடமைகளைச் சிறப்பாகச் செய்யுங்கள்; அதேவேளை நீங்கள் பிறந்த இனத்தின் உரிமை மீட்பிற்கான விழிப்புணர்வுப் பணிகளையும் விழிப்புணர்வோடு செய்யுங்கள்!” என்றார்.

image016

வெள்ளி விழா மாநாட்டின் கடைசி உரையாக சிறப்புரையாற்றிய மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ப. இராமசாமி அவர்கள்,

“மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் மூலம் தமிழ் மொழியை எங்களால் இயன்ற அளவு பாதுகாத்து வருகின்றோம். மலேசியா விடுதலை அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாங்கள் தமிழ் மக்களுக்காக கோருவது அரசியல், பொருளாதார, வேலைவாய்ப்பு, சமய உரிமை உள்ளிட்ட  அடிப்படை உரிமைகள் தான். பினாங்கு மாநிலத்தில் “அடையாளங்களைத் தேடி” என்ற தலைப்பில் 2013 ஆம் ஆண்டு நாங்கள் நடத்திய மாநாட்டில் ஐ.நா மூலமாக ஒரு பொதுவாக்கெடுப்பு ஈழத்தில் நடத்த வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றினோம். சுகாட்லாந்து நாட்டில் சனநாயக முறைப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது அதுபோல தமிழர்களுக்கு அரசியல் தீர்வுக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

தேசங்கள் குறித்து “கற்பனை சமூகம்” என்ற தலைப்பில் பெனிடிக்ட் ஆண்டர்சன் அவர்கள் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் தன் தேசம் குறித்து ஒரு கற்பனைக்குள்ளேயே தொடர்ந்து வாழ்ந்து வரும் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் நிலையோடு இதை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

image017

இன்று மலேசியாவில் உள்ள “மக்கள் கூட்டணியில்” எங்கள் கட்சி இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் தேர்தலில் ஒரு அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம்.  இந்த மாற்றம் மூலம் மலேசியத் தமிழர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் வரும் என நான் நம்புகின்றேன். அதே போல தமிழகத்திலும் ஈழத்திலும் சரியான அரசியல் தலைமை வழிகாட்டுதல் மூலம் நம்மால் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். நமது இன நலக்கான இந்தப் போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

அமெரிக்காவில் இருந்து இத்தனை அரசியல் பணிகளை உலகத் தமிழ் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இங்குள்ள சனநாயகச் சூழலில் இத்தனை ஆண்டு செயல்பட்டு இந்த மாநாட்டை நடத்தியுள்ளீர்கள். இதேபோல் இன்னும் பல மாநாடுகள் நடத்தவும் தொடர்ந்து செயல்படவும் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்” என்றார்.

image018

உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாட்டுத் தீர்மானங்களை முனைவர் தணிகுமார் சேரன் அவர்கள் முன்மொழிந்தார், அமைப்பின் உறுப்பினர்களும், பார்வையாளர்களும் தீர்மானங்களை வழிமொழிந்து ஆதரவு தெரிவித்தனர்.

தீர்மானங்கள்:

“க. தமிழ் நாட்டில் தமிழைப் பயிற்சிமொழியாக்க வேண்டும் என்றும் தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணிகளில் 80 விழுக்காடு வரை  ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றோம்.

உ. ஈழத்தமிழர்களைத் தொடர்ந்து அழித்து தமிழ் இன அழிப்பை நடத்திவரும் இலங்கையுடன் அனைத்து உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ளவேண்டும் என்றும், இலங்கைத் தீவில் தனித் தமிழ் ஈழம் அமைய இந்தியா அனைத்து உதவிகளையும் புரிய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.

ங. பல தேசிய இனங்களும் பல தேசிய மொழிகளும்  கொண்ட இந்தியாவில் இந்தி என்னும் ஒரு மொழியை ஆட்சி மொழியாக வைப்பது இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பெரும்பான்மையான மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்துவதாக அமையும் என்ற உண்மையையை உணர்ந்து, அனைத்து தேசிய மொழிகளும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக அமைய இந்தியாவின் அரசியல் அமைப்பைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

ச. ஆறுகள் பிறக்கும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் வரை அவற்றின் பயன்பாட்டில் வாழும் அனைவருக்கும் அவை உரிமையானவை என்ற உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயத்தை நிலைநிறுத்தி, காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகிய தமிழ்நாட்டில் பயன்படும் ஆறுகளில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் கடமை, ஆகவே இந்தக் கடமையைச் செய்தே ஆகவேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்துகின்றோம்.”

பல்வேறு நாடுகளில் இருந்து வெள்ளி விழா மாநாட்டிற்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு உ.த.அ பொறுப்பாளர்கள் நினைவுக் கேடயம் வழங்கினர். திரு. சான் பெனக்டிட் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

விழா நிறைவாக தமிழர் மரபுக் கலைகளான பொம்மலாட்டம், கரகம், காவடி, கும்மி, மயிலாட்ட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம், குறவராட்டம் ஆகிய கலைகளும், கவிஞர் சேரன், பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களுக்கு செல்வி மாதவி சங்கரின் நடனமும் அரங்கேற்றப்பட்டது.

image019

பல நாடுகளில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களும், கலிபோர்னியா, நியூயார்க், நியூசெர்சி, மினசோட்டா, ஓகாயோ, கனக்டிகட், அட்லாண்டா, டெக்சசு, டெலவர், பென்சல்வேன்னியா, மேரிலாந்து, வடகரோலினா, விர்சினியா உள்ளிட்ட மாகாணங்களில் இருந்து ஏராளமானோரும் உ.த.அ வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!”

 

– ச. இளங்கோவன், உலகத் தமிழ் அமைப்பு