மாண்புமிகு முதல்வர் செல்வி செயலலிதா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

மாண்புமிகு முதல்வர் செல்வி செயலலிதா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மாண்புமிகு செல்வி செயலலிதா அவர்கள் நோய்வாய்ப்பட்டு உடல் நலம் தேறிவந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி தமிழர்கள் அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

மதிப்பிற்குரிய செல்வி செயலலிதா அவர்கள் தமது வாழ்வில் தடைகள் பலவற்றைத் தாண்டித் திரைத்துறையிலும், அரசியலிலும் வெற்றி கண்டார்.  தமிழக அரசியலில் முதல்வராகப் பணியாற்றிக்கொண்டே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாகச் சாதனை படைத்தார்.

தமிழ் நாட்டின் முதல்வராக, தமிழர்களின் எண்ணங்களுக்குக் குரல் கொடுத்தார்.  இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்றும், தனித்தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார். தமிழ்நாட்டில் இலங்கைப் படைக்குப் பயிற்சி அளிப்பதையும், இலங்கையுடன் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதையும் கடுமையாக எதிர்த்தார். மேலும் இராசீவ்காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழுவரை விடுவிக்கத் தீர்மானம் நிறைவேற்றி அவர்களின் விடுதலைக்கு முயன்று தமிழர்களின் பேராதரவைப் பெற்றார்.

jayalalithaa

காவிரி ஆற்று நீர், முல்லைப்பெரியாறு அணையளவு, மீத்தேன் எரிகாற்று, கெயில் குழாய் பதிப்பு உள்ளிட்டத் தமிழ்நாட்டின் பல வாழ்வியல் சிக்கல்களை தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு உண்மையாப் பாடுபட்டுத் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து உலகத்தமிழர்களின் உள்ளத்தில் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய இடத்தைப் பிடித்தார். அண்மைக் காலங்களில் மாநில உரிமைகளுக்காக ஓங்கி ஒலிக்கும் குரலாக அவர் இருந்தார். அவர் காட்டிய பாதையில் அ.இ.அ.தி.மு.க. தொடர்ந்து பயணித்து தமிழரின் உரிமைகளைக் கட்டிக்காத்து, தமிழர் அனைவரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடவேண்டும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் சார்பாக, செல்வி செயலலிதா அவர்களைப் பிரிந்து வாடும் உறவுகளுக்கும், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும், தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் உலகத்தமிழ் அமைப்பு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றது. அம்மையாரின் ஆன்மா அமைதியைத் தழுவ இறுதி அஞ்சலி செலுத்துகின்றது.

அன்புடன்,
முனைவர் வை. க. தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு
05-திசம்பர்-2016
அமெரிக்கா