மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ? என்றார் சுப்பிரமணிய பாரதியார். ஆனால் நாம் இன்றளவும் நம் உடனிருக்கும் மனிதர்களை மனிதர்களாக மதிக்கின்றோமா? நம்மில் ஒருபகுதியினரைத் தொடர்ந்து மனிதக் கழிவை அள்ள வைத்துக்கொண்டே வல்லரசுக் கனவோடு வாழ்கிறோம்.
அவர்களை நாம் நம்மில் ஒருவராக ஒரு கணம் கருதிப்பார்த்திருந்தால்? அப்படி மனிதநேயத்தோடு பார்த்தார் – தோழர் திவ்யா பாரதி எனும் வழக்குரைஞர். அம்மக்களுக்கான தீர்வு என்னவென்று இக்குமுகத்தின் முகத்தில் அறைந்தாற்போல் ‘கக்கூசு’ எனும் ஆவணப்படத்தின் மூலம் கேட்டுள்ளார். ஆவணப்படத்தின் இணைப்பு: https://goo.gl/XTD7En
அரசின் போலித்தனம், குமுகத்தின் ஆதிக்கச்சிந்தனை, முதலாலித்துவச் சுரண்டல், அரசியல் சூதாட்டம் என அம்மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துச் சிக்கல்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளார். அம்மக்களுக்காகப் போராடியதாலும், ‘கக்கூசு’ ஆவணப்படம் தொடர்பான பணிகளாலும் பல வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றார்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
‘கக்கூசு’ ஆவணப்படத்தினை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும், நிலையான தீர்வைப் பெற அரசியல் அழுத்தங்களைப் பலமுனைகளில் இருந்தும் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றார்.
‘எல்லாரும் ஓர்நிறை’ என்று என்றோ பாரதி முழக்கமிட்டார். அதற்கான சிறு முயற்சியையேனும் நாம் மேற்கொள்ள வேண்டாமா?
அன்புடன்,
முனைவர் வை. க. தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு
25-யூலை-2017, அமெரிக்கா