தமிழ் நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் என்னும் சிற்றூரில் ஏழைக்கூலித் தொழிலாளிக்குப் பிறந்த, தாயை இளமையில் இழந்த ச. அனிதா எனும் இளம் பெண் தனது திறமையினாலும் கடும் உழைப்பினாலும் மிகுதியான மதிப்பெண்களைப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெற்றிருந்தும், “நீட்” (NEET) என்னும் முறையற்றத் தேர்வினால், தனது வாழ்நாள் கனவான மருத்துவப் படிப்பைப் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள நேர்ந்ததற்கு உலகத் தமிழ் அமைப்பு தனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவிக்கின்றது. இப்படியான இக்கட்டான சூழலை எதிர்கொண்டு போராட வேண்டும் என்றும் உயிர் துறக்கக் கூடாது என்றும் அன்போடும் உரிமையோடும் தமிழ் மாணவர்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இது போன்ற துயரமான நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் நீட் போன்ற முறையற்ற, பக்கச்சார்பான, ஏழை எளிய மக்களுக்கு எதிரான, மாநில உரிமையைப் பறிக்கும் சட்டங்களை உடனடியாக நீக்க ஆவண செய்யும்படி இந்திய அரசையும் தமிழ் நாட்டு அரசையும் உலகத் தமிழ் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
கல்வி மற்றும் அடிப்படை மனித உரிமைகள், குமுகப் பொருளாதார முன்னேற்றங்கள் போன்ற அனைத்து உரிமைகளும் மாநிலங்களின் பட்டியலிலேயே இருக்க வேண்டியது மிகவும் தேவை. பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டத்தில் வெளிநாட்டு உறவு, பாதுகாப்பு, பணத்தாள், உள்நாட்டுத் தொடர்பு ஆகிய நான்கு துறைகள் தவிர மற்ற அனைத்துத் துறைகளும் அந்தந்த மொழிவழி மாநிலங்களுக்கே இருக்க வேண்டும். அதற்கேற்ப இந்திய அரசியல் அமைப்பை மிக விரைவில் மாற்ற வேண்டியது இன்றியமையாத உடனடித்தேவை ஆகும்.
அன்புடன்,
முனைவர் வை. க. தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு