தமிழ்நாடு நாள் சிறப்பு கொண்டாட்டம் – முதலமைச்சர் அவர்களுக்கு உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் !

தமிழ்நாடு நாள் சிறப்பு கொண்டாட்டம்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு

உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் !

மாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம் !

உலகத் தமிழ் அமைப்பு 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிறுவப்பட்டது; உலகளாவிய தமிழர்களின் அடிப்படை உரிமைகள், நீதி – நலன்களைப் பாதுகாப்பது, மீட்டெடுப்பது ஆகியவற்றின் பொருட்டுக் கடந்த 30 ஆண்டுகளாகச் செயலாற்றி வருகின்றது.

நவம்பர் 1தமிழ்நாடு நாள்” அரசு விழா நாள் அன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது உலகத்தமிழரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு நாளை சிறப்பாக கொண்டாட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 தொல்காப்பியத்தின் உரை ஆசிரியர் இளம்பூரணர், தமிழ்நாடு என்ற சொல்லை நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்எனப் பயன்படுத்தியுள்ளார். இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருதினையாயின்என்று தமிழ்நாடு பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது. இன்றைய தமிழ்நாடு அப்படி ஒன்றும் எளிதாகவும் உருவாகிவிடவில்லை.

 மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பின் போது வட எல்லைப்போராட்டத்தில் முகாமையான பங்காற்றியோர் சிலம்புச்செல்வர் திரு. ம. பொ. சிவஞானம், திரு.மங்கலம் கிழார், திரு. விநாயகம்; தெற்கு எல்லைப் போராட்டத்தில் முகாமையான பங்காற்றியோர் திரு. பி. எஸ் மணி, திரு. சாம் நதானியெல், திரு. நேசமணி போன்ற பல தமிழ்த் தலைவர்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தினர். தமிழ்நாடு என பெயர் மாற்றுங்கள் என்று கூறி தனது 78 வயதில் 77 நாள் உண்ணாவிரதமிருந்து உயிர்விட்டார் ஈகி திரு. சங்கரலிங்கனார் அவர்கள்.

நம் முன்னோர்கள் நடத்தியப் போராட்டங்களால் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று தமிழ்நாடு தனியாக பிரிக்கப்பட்டது, அதற்கு தமிழ்நாடு என்பதே தன்மானப் பெயர் என திரு. ம. பொ. சிவஞானம் உள்ளிட்ட தலைவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை, அரசு சார்பாக ஏற்றுக்கொண்டு பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது.

 அவ்வகையில் தமிழ்நாட்டு எல்லையைப் பாதுகாக்கவும் பெயர்சூட்டவும் பாடுபட்ட சான்றோர் பெருமக்களைப் போற்றவும், மொழிவாரி அரசு அமைக்கப்பட்ட நாளை சிறப்பிக்கவும் கடந்த ஆண்டு முதல் “நவம்பர் 1தமிழ்நாடு நாள்” என அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை உலகில் உள்ள அனைத்து தமிழர்களும், தமிழ்ச் சங்கங்களும், தமிழ் அமைப்புகளும் தமிழ்நாடு நாளைக் கொண்டாடி வருகின்றனர். நமது அண்டை மாநிலமான கர்நாடக அரசு  நவம்பர் மாதம் முழுவதும் கொண்டாடுவதுபோல், தமிழ்நாட்டு அரசும் தமிழ்நாடு நாளை கொண்டாடவேண்டும் என்பதே தமிழரின் எதிர்பார்ப்பு. மேலும் பொதுமக்கள், அரும்பெரும் தமிழ் அறிஞர்கள் கருத்தினைக்கேட்டு தமிழ்நாட்டுக் கொடியை வடிவமைத்து தமிழ்நாட்டு அரசு வெளியிட வேண்டும் என்றும் உலகத் தமிழர்களின் சார்பாக உலகத் தமிழ் அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.

 தமிழர்கள் அனைவர்க்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள் !

அன்புடன்,

இரவிக்குமார் சுப்பிரமணியம்

தலைவர்உலகத் தமிழ் அமைப்பு

அக். 22, 2021; வாசிங்கடன் டி.சி.