நேர்மை எளிமையின் வடிவமான தோழர் நல்லக்கண்ணு ஐயாவின் மறைவு – ஆழ்ந்த இரங்கல்

தோழர் நல்லக்கண்ணு ஐயாவின் மறைவிற்கு

உலகத் தமிழ் அமைப்பின் ஆழ்ந்த இரங்கல் !

தோழர் இரா. நல்லகண்ணு ஐயாவின் மறைவுச் செய்தி உலகத் தமிழர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் நல்லகண்ணு ஐயா ( 26 திசம்பர் 1924 – 25 பிப்ரவரி 2026) தனது 101 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.

தோழர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஐயா நல்லகண்ணு தமிழர் அறத்தின் அடையாளமாகவும், தமிழ்நாட்டு அரசியலில் தூய்மையின் முகமாகவும், எளிமையின் வடிவமகவும், நேர்மையின் சிகரமாகவும், வாழ்நாள் முழுவதும் போராளியாகவும் வாழ்ந்த ஐயாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது நேர்மை, எளிமை நிறைந்த பொதுவாழ்க்கை போற்றத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் இராமசாமி – கருப்பாயி இணையருக்கு மகனாகப் பிறந்தார். வசதியான உழவர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இளம் வயதிலேயே தொழிலாளர் நலன் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுப் பலமுறை சிறை சென்றார். பின்னர், பொதுவுடைமைக் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்; 7 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமை படுத்தப்பட்டார். இப்போராட்டங்கள் அனைத்திலும் விட்டுக்கொடுப்பின்றி உறுதியோடு செயல்பட்டார்,

தமிழக உழவர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய அவர், உழவரின் உரிமைக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும், மணல் கொள்ளைக்கு எதிராகவும் சமரசமற்ற போராட்டங்களை முன்னெடுத்தார். தாமிரபரணி ஆற்றைக் காக்க அவர் நடத்திய சட்டப் போராட்டங்கள் என்றும் நினைவுகூரப்படும். அரசியலில் நேர்மைக்கும் தூய்மைக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார்.

அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்வில் பல போராட்டங்களைச் சந்தித்திருப்பார்கள், ஆனால் ஐயாவின் வாழ்க்கை முழுவதுமே போராட்டமாக் களமாக இருந்தது.

அவரது 80 ஆவது பிறந்தநாளில் தமிழ்நாட்டு மக்கள் திரட்டி அளித்த ரூ. 1 கோடி நிதியையும், மகிழுந்தையும் அப்படியே கட்சி நிதிக்கே திருப்பிக் கொடுத்தார்.

தமிழ்நாட்டு அரசு வழங்கிய ‘தகைசால் தமிழர்’ விருதின் பரிசுத் தொகையான ரூ. 10 லட்சத்தை (மேலும் சொந்தப் பணம் ரூ. 5,000) முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

தமக்கு வழங்கப்பட்ட அரசு வீட்டையும் எளிய மக்களுக்காகத் துறந்த பெருந்தகை. இதனால் வருங்காலப் பொதுவுடைமைத் தோழர்களுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கினார்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன். –வாய்மை, திருக்குறள்

மாமனிதர் தோழர் நல்லகண்ணு ஐயாவுக்கு உலகத் தமிழ் அமைப்பின் புகழ் வணக்கம். ஐயாவின் பூதவுடல் நம்மைவிட்டுப் பிரிந்தாலும், அவரது புகழுடல் உலகத் தமிழர்களிடம் என்றென்றும் நிலைத்திருக்கும். ஐயாவை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர்க்கும், உறவினர்க்கும், தமிழின உணர்வாளுர்க்கும் உலகத் தமிழ் அமைப்பின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,

இராசா இளங்கோவன்

தலைவர், உலகத் தமிழ் அமைப்பு