அயோத்திதாசப் பண்டிதர் ( 1845-1914) நினைவு நூற்றாண்டு

-க. தில்லைக்குமரன், நன்றி: சிறகு இதழ்

அயோத்திதாசப் பண்டிதர் 1845 ஆம் ஆண்டு மே திங்கள் 20 ஆம் நாள் சென்னையில் பிறந்தார். அவரது தந்தையாரின் பெயர் கந்தசாமி, தாயாரின் பெயர் தெரியவில்லை. அயோத்திதாசருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன் என்பதாகும். அவரது தாத்தா கந்தப்பன் என்பவர் சார்ச் ஆரிங்டன் பிரபு என்பாரிடம் (பட்லர்) பணியாற்றியவர். அவரும் தமிழ் மீது பற்றுக் கொண்டவர். அவர்தான் திருக்குறள், நாலடி நானூறு ஆகிய நூல்களின் ஓலைப் படிகளைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்து எல்லீசு துரையிடம் கொடுத்தவர். அந்தப் படிகளே பின்னர் அச்சில் வெளியிடப்பட்டன. ஆங்கிலேயரிடம் பணிபுரிந்த காரணத்தால் கந்தப்பனுக்கு ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது.

சென்னையில் இருந்த காலத்தில் பத்ர தேசிகானந்தர் என்பவரிடமும், அயோத்திதாச கவிராச பண்டிதர் என்பவரிடமும் தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களையும் அயோத்திதாசர் ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார். இவை மட்டுமன்றி. சமற்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார். தனது இயற்பெயரான காத்தவராயனை விடுத்து தனது ஆசிரியர்களில் ஒருவரான அயோத்திதாச கவிராச பண்டிதரின் பெயரையே தனக்குச் சூட்டிக் கொண்டார். இதனிடையே அவரது தந்தையாருடைய பணியின் நிமித்தமாக அயோத்திதாசரின் குடும்பம் குன்னூருக்குக் குடி பெயர்ந்தது.

இளம் வயதினராயிருந்த அயோத்திதாசர் தான் ஈட்டிய அறிவைப் பூட்டி வைத்திருக்கவில்லை. அதை அரசியலில் துணிவோடு இணைத்து நடைமுறைப் பணிகளில் ஈடுபட்டார். குன்னூர் பகுதிகளில் வாழ்ந்திருந்த தோடர் எனும் பழங்குடியினரிடையே அரசியல் பணிகளை மேற்கொண்டு அவர்களை அமைப்பாக்கிட முயன்றார். அந்த சமூகத்துப் பெண் ஒருவரை மணந்து பின்னர் அவரோடு இரங்கூனுக்குச் சென்றார். அங்கு ஆண் குழந்தையொன்று பிறந்ததெனவும் அங்கே அவர் மனைவி இறந்து போனதால் அயோத்திதாசர் சென்னைக்குத் திரும்பி வந்தாரெனவும் தி. பெ. கமலநாதன் கூறுகிறார். (பார்க்க: போதி _ காலாண்டிதழ் ஏப்ரல் 2005, பக் 15). இரங்கூனில் பிறந்த மகன் அங்கேயே தங்கிவிட்டாரெனவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்தச் செய்தியைத் தவிர பண்டிதரின் இரங்கூன் வாழ்க்கை குறித்த செய்திகள் நமக்கு மேலும் கிடைக்கவில்லை.

அயோத்திதாசர் தமது இருபத்தைந்தாவது அகவை முதற் கொண்டே (1870) ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாரெனத் தெரிகிறது. தமிழ் இலக்கியத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமை தனித்துவமான தத்துவப் பார்வையொன்றை நோக்கி அவரை இட்டுச் சென்றது. அவரது மெய்யியலின் உள்ளீடாகத் தொடக்ககாலம் முதலே பகுத்தறிவு என்பதுதான் இடம் பெற்றிருந்தது. கடவுள் நம்பிக்கை, சடங்குகளை உயர்த்திப் பிடித்தல், பார்ப்பன வைதீக மதக் கொள்கை முதலானவற்றை முற்றாக நிராகரித்து மானுட விடுதலைக்கான ஒரு தத்துவமாகவே அவரது பார்வை உருப்பெற்றிருந்தது.

அயோத்திதாசரின் அரசியல் பணிகள் தொடங்குவதற்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1779 ஆம் ஆண்டிலேயே, பறையர் சமூகத்தவர் ஒன்று திரண்டு தமது உரிமைகளுக்காக ஆங்கில அரசிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். புனித சார்ச் கோட்டைக்கு அருகில் குடியிருந்த பறையர்களை அங்கிருந்து காலி செய்துவிட்டு வெளியேறும்படி ஆங்கில அரசாங்கம் கூறியபோது, தாமும் தமது முன்னோரும் ஆங்கில அரசுக்குச் செய்த பணிகளைக் குறிப்பிட்டு அப்பகுதியில் தாம் தொடர்ந்து குடியிருக்க இசைவுதரும்படி அம்மனுவில் அந்த மக்கள் கேட்டிருந்தனர்.

சென்னை சார்ச் டவுனில் பறையர் குடியிருந்த பகுதி பெரிய பறைச்சேரி எனவும், பின்னர் அது பிளாக் டவுன் எனவும் வழங்கப்பட்டது. அங்க குடியிருந்தவர்கள் அரசுக்கு வரி கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அந்த வரியை நீக்க வேண்டுமென 1810 ஆம் ஆண்டு அங்கே குடியிருந்த அரசுக்கு வேண்டுகை ஒன்றை அளித்தனர்.

தீண்டாத மக்களின் இந்த அரசியல் நடவடிக்கைகளுக்கும், இந்தியாவில் ஆங்கிலேயர் நிலை பெற்றதற்குமிடையே ஒரு தொடர்பு உள்ளது. இக் காலகட்டத்தில்தான் இந்தியா வெற்றி கொள்ளப்பட்டது என அம்பேத்கர் குறிப்பிடுகிறார். (தொகுதி 23 பக்கம் 122_123) 1757 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிளாசிப்போர் தொடங்கி 1818 ஆம் ஆண்டில் நடைபெற்ற கோரேகௌன் போரின் வெற்றியோடு ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் உறுதிப்பட்டது. “பிளாசிப் போரில் கிளைவுடன் சேர்ந்து போரிட்டவர்கள் துசாத்துகள். அவர்கள் தீண்டாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோரேகௌன் போரில் பங்குகொண்டு சமர் புரிந்தவர்கள் மகர்கள். அவர்களும் தீண்டாத சமூகத்தவரே ஆவார்கள்.” என அம்பேதகர் குறிப்பிடுகின்றார். ஆங்கிலேயர் ஆட்சிக்குத் தாங்கள் தந்த பலிகளையும் உழைப்பையும் குறிப்பிட்டே தீண்டாத மக்கள் வேண்டுகைகளை அளித்தார்கள்.

இப்படிக் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கைகளை அளிப்பதே அக்காலத்தில் தீண்டாதாரின் போராட்ட மரபாக இருந்துள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் பார்ப்பனர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இவர்களை அச்சுறுத்துவது, தம்முடைய குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்வது, அவர்களை உயிரோடு எரிப்பது முதலான வழிமுறைகளைக் கையாண்டு வந்தனர். இந்த வழக்கத்தைத் தடைசெய்து 1795 ஆம் ஆண்டு வங்காள ஒழுங்குமுறைச் சட்டம் என்றொரு சட்டத்தை ஆங்கிலேயர் கொண்டு வந்தனர். (அம்பேத்கார் நூல் தொகுதி 23 பக்கம் 165_ 177)

சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சாதியற்ற தொல்குடி மக்களின் அரசியலில் ஒரு முடுக்கத்தை ஏற்படுத்தியவர் அயோத்திதாசர் ஆவார். இந்தியாவில் குடிக்கணக்கெடுப்பு எடுக்கும் வழக்கம் தொடங்கியபோது அதனை ஒரு அரசியல் போராட்டத்துக்கான வாய்ப்பாக அயோத்திதாசர் அடையாளம் கண்டார். தீண்டாதாராய் வைக்கப்பட்டிருந்த தொல்குடி மக்களிடம் அரசியல் வழியிலான விழிப்புணர்வை உண்டாக்க, அவர்கள் தம்மை “சாதியற்ற திராவிடர்கள்” எனக் குடிக் கணக்கெடுப்பில் பதிந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

1881 ஆம் ஆண்டுதான் இந்தியாவில் முதன் முதலாக பொதுக்குடிக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகையைக் கண்டறிந்து இந்தியாவின் மொத்த மக்கள் தொகையை அளவிடுவது என்றே அந்த குடிக்கணக்கெடுப்பின்போது சாதிவாரியகக் கணக்கெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 1901 ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது “உள்ளூர் மக்களின் கருத்துகிணங்க சமூக வழியில் வகைப்படுத்துதல்” என்ற புதிய முறையை ஆங்கில அரசு அறிமுகப்படுத்தியது.

1911 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட நான்காவது குடிக்கணக்கெடுப்பின் போதுதான் தீண்டாத மக்கள் எவ்வளவு பேர் இந்த நாட்டில் உள்ளனர் என்று தனியே கண்டறிவதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில்தான் இந்திய அரசியலில் இசுலாமியர்களின் போராட்டம் எழுச்சி பெற்றது.

சட்டமன்றங்களில் தங்களுக்கு வேண்டிய பெயராண்மைத்துவம் வேண்டுமெனக் கேட்டு அவர்கள் போராடி வந்தனர் (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுதி 5, பக்கம் 229_246) 1909 ஆம் ஆண்டு சனவரி 27 ஆம் நாள் இசுலாமியர்களின் குழு ஒன்று மார்லி பிரபுவைச் சந்தித்து மனு ஒன்றைத் தந்தது. அதுவரை தீண்டாத மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்காத சாதி இந்துக்கள் அப்போதுதான் தீண்டாதாரின் மக்கள்தொகை முகாமைத்துவத்தை உணர்ந்தனர். தீண்டாத மக்களைத் தனியே கணக்கெடுப்புச் செய்வது ஆங்கில ஆட்சியாளர்களும் இசுலாமியர்களும் செய்யும் கூட்டுச்சதி என அவர்கள் கூக்குரலிட்டனர். ஆனால், அந்த எதிர்ப்புகளைத் தாண்டி குடிக்கணக்கெடுப்பு முற்றுப் பெற்றது.

1911 ஆம் ஆண்டு குடிக்கணக்கெடுப்பின் போது இந்துக்களையும், இந்துக்கள் அல்லாதவர்களையும் பிரித்தறிய கேட்கப்பட்ட வினாக்களை ஆதரித்து அயோத்திதாசர் எழுதினார் (31.11.1910), “பாப்பானுக்கு வேறு தெய்வம் பறையனுக்கு வேற தெய்வமென்று பாடித் திரிகின்றவர்களும்; பறையனை பிணத்திற்கு ஒப்பானவன், பிணத்தைக் கண்டாலும் தொட்டாலும் குளிப்பது போல பறையனைக் கண்டாலும் தொட்டாலும் குளிக்க வேண்டுமென்ற மனுசாத்திரம் எழுதி வைத்துக் கொண்டிருப்பவர்களும்” கணக்கெடுப்பு ஆய்வாளர்தான் பிளவுபடுத்தப் பார்க்கிறார் என வீண் கூச்சல் போடுவது ஏனென்று கேட்டார். “இக்குடிமதிப்புக் காலத்தையே குலச் சிறப்பின் காலமெனக் கருதி சீலம் பெற்று இராசாங்கத்ததார் நன்னோக்கத்திற்கு இசைந்து நன்மார்க்கமும் நற்சீரும் அடைய வேண்டும்” என்பதே அவரது நோக்கமாக இருந்தது.

நமக்கு இப்போது கிடைக்கிற விவரங்களைக் கொண்டு பார்த்தால் இந்திய அளவில் குடிக்கணக்கெடுப்பின்போது அயோத்திதாசரைப் போல அதனை ஓர் அரசியல் சிக்கலாக மாற்றியவர்கள் வேறு யாரும் கிடையாது. இந்துக்களை விட்டு அகன்ற கிறித்தவர்களாகவோ, இசுலாமியர்களாகவோ, பௌத்தர்களாகவோ மாறிவிடுங்கள் என தீண்டாத மக்களுக்கு அப்போது அவர் ஆலோசனை கூறினார்.

1881 ஆம் ஆண்டு குடிக்கணக்கெடுப்பின்போது தொடங்கி பின்னர் 1911 ஆம் ஆண்டில் குடிக்கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட காலம் வரை சாதியற்ற தொல்குடி மக்களின் தனித்துவமான அடையாளத்தைப் பேண அவர் கடுமையாகப் போராடியிருப்பது வியப்பளிக்கிறது.

“இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக்குடிகளேயாகும். இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி (எதிரி) மித்துருக்கள் (நண்பர்) ஆகமாட்டார்கள். பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தர்களுமேயாகும். . . சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்ற கணக்கெடுப்பு ஆய்வாளர் தன்னுடைய குடிமதிப்பு ஆய்வறிக்கை புத்தகத்திலும் வெளியிட்டுருக்கின்றார்கள். இவைகள் யாவையும் தற்கால கணக்கெடுப்பு ஆய்வாளர் கனந்தங்கிய உயர்திரு கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமையாலும், பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வ குடிகளில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள். அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது ‘சாதிப்பேதமற்ற திராவிடர்களென’ ஒரே பெயரால் -குறிப்பது உத்தமமும், பிரிட்டிசு ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதிபேதமற்ற திராவிடர்கள் அடையவும் ஏதுவுண்டாகும்,” என அயோத்திதாசர் எழுதியுள்ளார் (17.12.1910)

அதுமட்டுமல்லாது கிறுத்தவர்களையும், இசுலாமியர்களையும் தவிர்த்து பிறர் அனைவரையும் இந்துக்களென்றே குடிக்கணக்கெடுப்பில் குறிக்க வேண்டும் என்று வடநாட்டினர் சிலர் ஏடுகள் வாயிலாகத் தெரிவித்துவந்த கருத்துக்களையும் கடுமையாக அவர் எதிர்த்துள்ளார்.

ஏசு கிறித்துவின் போதனைகள் கிறுத்தவ மதத்தின் மையமாக இருப்பது போல, நபிகளின் போதனைகள் முகம்மதியர்களின் மதநம்பிக்கைக்கு ஆதாரமாக இருப்து போல இந்து மதத்துக்கு எதுவும் கிடையாது என்பதை கேலியோடு அவர் சுட்டிக் காட்டினார். “இந்து என்பவனுக்கு தேசமும் கிடையாது. பெற்று வளர்த்த தந்தையாரும் கிடையாது. அவன் போதித்த தர்மமும் இன்னதென்று கிடையாது. அவனால் சீர்திருத்திய மக்கள் கூட்டமும் கிடையாது. அவனது சரித்திரமும் கிடையாது. இத்தகைய யாதுமற்றோன் மதம் இந்து மதமாம். எந்த மதத்திற்கும் சொந்த மில்லாத மதம் இந்து மதமெனில் அவை யாருக்குரியவை? யார் அவற்றைத் தழுவுவார்?. . . . . . இந்து ஒருவன் உண்டாவென்னில் வேதாந்தி மதம் என்பதும், வேதாந்தி ஒருவன் உண்டாவென்னில் அத்துவித மதம் என்பதும், அத்துவிதி என்பவன் ஒருவன் உண்டாவென்னில் விசிட்டாத்துவித மதம் என்பதுமாகிய மாறுதலைக் கூறிவருவார்களன்றி எதற்கும் தக்க ஆதாரங்களைக் கொடுக்கமாட்டார்கள்.” என்று குறிப்பிட்ட அயோத்திதாசர், கிறுத்தவர்களும் முகமதியர்களும் இந்த தேசத்தாருடன் அனைத்து பாவனைகளிலும் சம்பந்தித்திருக்கின்றார்கள். அவர்களை விலக்கச் சொல்கின்றவர்கள் இந்த தேசத்தோருடன் ஒரு சம்பந்தமும் வைத்துக் கொள்ளாத ஆரியர்களை இந்த நாட்டிலிருந்து அகற்ற முன் வருவார்களா? என்றும் கேட்டார்.

ஆக, அயோத்தி தாசரின் திராவிட அடையாளம் என்பது சாதிபேதமற்றது. தனித்துவமானது. அது, கிறித்தவர்களை, இசுலாமியர்களை சகோதரர்களாகப் பார்க்கின்ற ஓர் அடையாளமுமாகும்.

தமிழ்ச் சமூகத்துக்கு இன்றும் பயன்படக்கூடிய சிந்தனைகளை முன்வைத்த அயோத்திதாசப் பண்டிதர் 1914 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் பௌத்த மந்திரங்களை உச்சரித்தபடி இந்த உலகைத் துறந்தார். இது அவரது நினைவு நூற்றாண்டு.

–   திரு. க. தில்லைக்குமரன், நன்றி: சிறகு இதழ்