பெண் ஏன் அடிமையானாள்?

-க. தில்லைக்குமரன், நன்றி: சிறகு இதழ்

கடந்த மார்ச்சு 6 ஆம் நாள், உலக மகளிர் நாள் உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் பெண்களின் வளர்ச்சியைக் குறித்த வெகுவளவில் கட்டுரைகளும், கருத்தரங்கங்களும் நடைபெற்றன. பெண்களின் சாதனைகளைக் கொண்டாடப்படும் அந்த நாளில் சென்னையில் ஓர் அஞ்சலி நிகழ்வு நடந்தது. டாடா மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த செல்வி உமா மகேசுவரி என்கிற இளம்பெண்ணின் மரணத்திற்காக. இயற்கை மரணமல்ல, கயவர்களால் வாழ்வைப் பறிகொடுத்த அந்த இளம்பெண்ணின் படுகொலைக்கான கண்ணீர் அஞ்சலி நிகழ்வு. சென்னையில் தகவல்நுட்ப பொறியியளார்களால் நடத்தப்பட்டுவரும் சேவ் தமிழ்சு (தற்பொழுது ‘இளந்தமிழகம்’) இயக்கத்தினரால் அந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உமா மகேசுவரியுடன் பணிபுரிந்த பணியாளர்களுடன் 100-ற்கும் மேற்பட்ட கணிஞர்கள் விளக்கேந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

வேதனை என்னவென்றால் ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரியும் சிறுசேரி தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் சிலரே பங்கேற்றதுதான். அதைவிட வேதனை, ஒரு சில பெண்களே அதில் பங்கேற்றது. அதில் பங்கேற்ற சில நண்பர்களிடம் நான் பேசும்போது அவர்களின்  ஏமாற்றத்தை உணரமுடிந்தது. என்ன நிகழ்கிறது என்று கூட கேட்காமல் பெண்கள் போனது நம் குமுகத்தின் நிலையை நன்கு எடுத்துக்காட்டுகிறது. இச்செயலை நான் ‘தன்நலம்’ என்றுதான் எடுத்துகொள்ள முடிகிறது. யாருக்கோ எதோ நடந்துவிட்டது, நமக்கென்ன என்கிற தன்நலப் போக்கினால்தான் அத்தனைச் சிக்கலும், துயரமும்.

இந்த நிகழ்விற்கு பின் முகநூலிலும், செய்தி ஊடகங்களிலும் ஓரிரு நாள் இதைக்குறித்த விவாதங்கள் நடந்தன. ஒரு சில விவாதங்களையும், கட்டுரையும் படிக்கும் பொழுது அனைவரும் இந்த துயரகர நிகழ்வை ஒரு பொழுது போக்கு போலவும், அரசு, நிறுவனம் மேலும் மற்றவர் மீதுள்ள சினத்தைக் காட்டும் நிகழ்ச்சிகளாக அவை இருந்தன என்று தோன்றியது. ஒருவரும் இது போன்ற வல்லுறவுக் கொடுமைகளின் மூலம் என்ன? அதை எப்படி போக்குவது? என்பது குறித்த கருத்துகள் ஏதும் இல்லை. பெரும்பாலோர் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க அரசு தவறிவிட்டது, பெண்கள் இரவில் தனியாகப் போவதைத் தவிர்க்கவேண்டும் என்பதையே மீண்டும் மீண்டும் கூறியது எரிச்சலை தந்தாலும், வியப்பு ஏதுமில்லை. நம்மை வளர்த்த பள்ளிகள், வளர்ந்த குமுகாயம் நமக்கு நுண்ணாய்வு திறனைக் (critical thinking) கற்றுக்கொடுக்கவில்லை. மக்களிடம் பழைய நூல்கள், கட்டுரைகள் மேலும் ஆங்கில நூல்கள் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டதும் அதற்கு பெரிய காரணம்.  இதையாவது பொறுத்துக்கொள்ளலாம், படித்த சிலர் முகநூலில் எழுதியதுதான் பெரும்சினத்தை வரவழைத்தது. அப்படியென்ன எழுதிவிட்டார்கள்? “வல்லுறவிற்கு காரணம் பெண்கள் உடுத்தும் உடைதான். ஆண்களை கவரும்படியான, உடல்வாகு தெரியும்படியான உடையை பெண்கள் அணியக்கூடாது” இதுதான் அவர்களின் வாதம். பெண்கள் இரவில் தனியாகப் போகக்கூடாது, தமக்குப் பிடித்த உடை அணியக்கூடாது, கற்காலத்திற்கு சென்றுவிட்ட உணர்வுதான் வந்தது எனக்கு.

ஆணாதிக்க சிந்தனையிலேயே வாழ்ந்து வருவதுதான் இப்படி பேசுவதற்கு காரணம், வேறேதுமில்லை. இந்த ஆணாதிக்க கண்ணோட்டத்தை இவர்களுக்கு பெருமளவில் தருவது திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும்தான். சிவாஜி, எம்.ஜி.ஆர் முதல் விஜய், ரஜினி, அஜித் மற்றும் இன்றிருக்கும் கதாநாயகர்கள் வரை ஆணாதிக்கப்பாணியில்தான் நடிக்கிறார்கள். தமிழ், ஆங்கில, இந்தி மற்றும் அனைத்துப் திரைப்படங்களிலும் (ஒரு சில தவிர) பெண்களை வெறும் போதைப்பொருளாகக் காட்டுவதும் இதற்கு ஒரு பெரும் காரணம். ‘பெண் அடக்கமாகவிருக்க வேண்டும்’, ‘ஆண்களை மதிக்க வேண்டும்’ என்கிற வசனம் இல்லாத தமிழ்ப் படங்களே இல்லையெனலாம். திரைப்படங்களில் தம் உள்ளம் கவர்ந்த கதாநாயகிகள் மட்டும் அறைகுறை ஆடைகளில் ஆடினால் கைதட்டி விசில் அடிக்கத் தோன்றும், ஆனால் சாலையில் அழகான உடையில் பெண்கள் வந்தால் மட்டும் தவறு என்பது ஆணாதிக்கக் கருத்தே அன்றி வேறொன்றையும் என்னால் கணிக்கமுடியவில்லை. வல்லுறவிற்கு உடை காரணமில்லை, ஆண்களின் ஒழுக்கக்கேடே அதற்கு முழுக்காரணம். அந்த ஒழுக்கக்கேட்டை வளர்ப்பது பெண்களை போகப்பொருளாகக் காட்டும் வலைத்தளங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளே.

பெண் ஏன் அடிமையானாள் ? – தந்தை பெரியார்

இந்த முதன்மையானச் சிக்கலைப் போக்க முதன்மை வழி ‘பெண் விடுதலை’. அது குறித்து பெரியார் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகளை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கட்டாயப் பாடமாக்க வேண்டும். இந்த துயரநிகழ்ச்சிக்கு பின் பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற நூலை மீண்டுமொருமுறை எடுத்து படித்தேன், 1942 ஆம் ஆண்டில் எழுதியது இன்றும் முழுமையாக பொருந்துகிறது. பெண்கள் சிக்கலுக்கு அவரது பார்வை 100 ஆண்டுகளுக்கு பின்பும் தேவைப்படும் என்பது அவரது எழுத்துகளில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆண்களும் பெண்களும், குறிப்பாக இளைஞர்கள்  படிக்க வேண்டிய முதன்மையான நூல் இது. பெண்கள் முன்னேற குறித்து பெரியார் கூறுவது,

”தற்போது பெண்களுக்குப் படிப்பும் வேலையும் இல்லாததால்தான் ஆண்களைச் சார்ந்து வாழவேண்டுமென்கின்ற நிலை இருக்கிறது. பெண்கள் ஆண்களைப் போன்று துணிவாக நடந்து கொள்ளவேண்டும். பெண்கள் தனியாக வாழமுடியும்; எதையும் சாதிக்க முடியும் என்கின்ற நிலையில் வாழ வேண்டும். சுதந்திரமாக, கவலையற்று வாழ, தொல்லையற்று வாழ, அறிவைக் கொண்டு சிந்தித்து, அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.”

பத்து அத்தியாயங்களில் பெண்கள் ஏன் இந்த இழிநிலையில் உள்ளார்கள் என்பதை அருமையாக எடுத்துக்காட்டியுள்ளார் பெரியார். கற்பிற்கு இரு அத்தியாயங்கள், வள்ளுவரையும் அவர் விடவில்லை. இரண்டாம் அத்தியாயமான ‘வள்ளுவரும் கற்பும்’ என்பதில் அவர் இரு குறள்களை எடுத்துக்காட்டி வள்ளுவர் காலத்திலும் பெண்கள் அடிமைநிலையில் இருந்ததைக் காட்டுகிறார்.

”சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

 நிறைகாக்கும் காப்பே தலை”

”நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்

 பேணிப் புணர்பவர் தோள்”

’காதல்’ எனும் அத்தியாயத்தில் காதல் என்பது பெண்ணை அடிமைப்படுத்துவதற்காக குமுகாயம் ஏற்படுத்திய ஒன்று என்றும், ’கல்யாண விடுதலை’ என்கிற பகுதியில் திருமணமென்பதே பெண்களை அடிமைப்படுத்த ஆண்களால் ஏற்படுத்தப்பட்ட கொடுமை என்று சினம் கொள்கிறார். தாலி என்பது மாட்டிற்கு மூக்கணாங்கயிறு போல் என்று கூறுவது நம் அனைவரையும் வருத்துவது தவிர்க்கமுடியாதது. ’மறுமணம் தவறல்ல’ என்கிற தலைப்பில் ஆண்களுக்கிருக்கிற உரிமை பெண்களுக்கும் உண்டு என்று வாதிடுகிறார்.

ஓரளவிற்கு முற்போக்குவாதியான என்னாலேயே ‘விபசாரம்’ என்கிற தலைப்பில் அவர் கூறுவதை நம் வளர்ந்த முறையின் காரணத்தினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எட்டாவது அத்தியாயத்தில் ‘விதவைகளின் நிலைமை’ யை ஆராய்கிறார்.  தமது தமக்கையாரின் 10 வயது மகள் திருமணமான 60 நாட்களிலேயே விதவையானதைக் கண்டு, இதை ஒழிக்க வேண்டும் பெரும்பாடுபட்டு அந்த பெண்ணிற்கு வயது வந்தபின் பெற்றோர் எதிர்த்தும் மறுமணம் செய்து வைத்து அதற்காக தன் வாழ்நாள் முழுதும் விதவை மறுமணத்தை ஆதரித்தும் தலைமைத் தாங்கி நடத்தியும் வைத்துள்ளார்.

‘சொத்துரிமை’ எனும் தலைப்பில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையுள்ளது என்று 1942 ஆம் ஆண்டிலேயே வாதிட்டு பின்பு தி.மு.க. ஆட்சியில் அது சட்டமாக்கிய பெருமை பெரியாருக்குண்டு.  ‘பெண் அடிமை என்பதற்கு உள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாதது என்பது மிகவும் முக்கிய காரணம் என்பது நமது அபிப்ராயம் (கருத்து)’ என்று அவர் எழுதியது பெண்களின் விடுதலையில் அவரது உறுதி புலப்படுகிறது.

‘கர்ப்பத்தடை’ என்கிற தலைப்பில் அவர் எழுதியதைப் படிக்கும் போது அதை மட்டும் ஆங்கிலத்தில் பதிப்பித்து அமெரிக்க குடியரசுக் கட்சியினருக்கு அளிக்கலாம் என்று தோன்றுகிறது. ‘பெண்கள் விடுதலையடையவும், சுயேட்சை (விடுதலை) பெறவும் கர்ப்பம் விரோதியாகவிருப்பதால் பெண்கள் குழந்தைகள் பெறுவதையே நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று அதிரடி புரட்சி முழக்கம் செய்கிறார்.

கடைசி அத்தியாயமான ‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ என்று ஆண்கள் தலையில் ஒரு போடுபோடுகிறார். ‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’, ‘தற்கால நிலையில் பெண்கள் விடுதலைக்கு பெண்களே வேறுவிதமான முயற்சி செய்தாலும் சிறிது சிறிதாவது ஆண்களுக்கு கஷ்டத்தைக் (துண்பத்தைக்) கொடுக்கக் கூடியதாக இருக்கலாம்.’ என்று கூறி பெண் விடுதலையை பெண்களே போராடி வெல்லவேண்டும் என்கிற கருத்தை ஆணித்தரமாக வைக்கிறார்.

75 ஆண்டுகளுக்கு முன்பே, பெண்களுக்கு கோலம் போட கற்றுக்கொடுப்பதைக் காட்டிலும், தற்காப்புக் கலையைக் (கராத்தே) கற்றுக்கொடுக்க வேண்டும், நீள முடியை வெட்டிக்கொள்ள (கிராப்) வேண்டும், புடவை கட்டுவதைக்காட்டிலும் மேற்சட்டையும் காற்சட்டையும் (பேண்ட்) அணிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறியவர் எந்தை பெரியார்.

தந்தை பெரியார் பெண் விடுதலைக்காகப் பாடுபட்டது பெரும்பாலும் மறைக்கப்பட்டுவிட்டது. இந்த ஒரு நூலை பெண்களும், ஆண்களும் படித்தால் போதும், பெண்களுக்கு எதிரான செயல்கள் நம் குமுகாயத்தில் குறைய வாய்ப்புள்ளது. பெண்கள் மீது திணிக்கப்படும் வல்லுறவு போன்ற கொடிய கொடுமைகள் நீங்கவும் வாய்ப்புள்ளது.

பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தனியாக செல்வதை தவிர்க்க வேண்டுமென்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஓவ்வொரு பெண்ணும் ‘மிளகுப்பொடித் தூவி’ (Pepper Spray) போன்ற பாதுகாப்புக் கருவிகளையும் வைத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஆண்களுக்கும் பெண்கள் குறித்த தெளிவு பிறக்க வேண்டும். அதற்கு அவர் படிக்கும் பள்ளிகளும், பெற்றோர்களும், வாழும் குமுகாயமும் பெண்கள் குறித்த கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். பெண்கள் உடுத்தும் உடையினாலும், அவர்கள் செயல்பாட்டினாலும் எந்த ஆணுக்கும் அப்பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ளும் உரிமை இல்லவே இல்லை.

இறுதியாக ஒன்றைக் கூறி விடைபெறுகிறேன். அது பாலியல் கல்வி. மாணவ, மாணவியருக்கு பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவதினால் சில நன்மைகள் உள்ளன. பாலியல் கல்வி கற்றுக்கொடுக்கப்படும் மேலை நாடுகளில் வல்லுறவு இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அங்கு பெண்கள் வல்லுறவு குறைவு என்பது என் கருத்து. பாலியல் கல்வியை கற்றுக்கொடுப்பதினால் சிறிது பயன் நிச்சயம் இருக்கும். அரசுகளும், பெண்கள் அமைப்புகளும் சிந்திக்குமா?.

-க. தில்லைக்குமரன், நன்றி: சிறகு இதழ்