மாவீரர் நாள் நினைவஞ்சலிக் கூட்டம் 2015 – உலகத் தமிழ் அமைப்பு

மாவீரர் நாள் நினைவஞ்சலிக் கூட்டம் 2015 – உலகத் தமிழ் அமைப்பு

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் தொலைப்பேசிக் கூட்டழைப்பை உலகத் தமிழ் அமைப்பு நடத்துகின்றது. இந்த ஆண்டு நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் திரு. சமர்ப்பா குமரன், திரு. ஆழிசெந்தில்நாதன், தோழர் தியாகு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

உலகத் தமிழ் அமைப்பின் மாவீரர் நாள் கூட்டத்தில் எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் தொலைப்பேசிக் கூட்டழைப்பில் கலந்துகொண்டனர். தலைவர் முனைவர் வை. க. தேவ் அவர்கள் வரவேற்புரையை  வழங்கினார். துணைத்தலைவர் திரு. இரவிக்குமார் அவர்கள் கூட்டத்தைத் தொகுத்து வழங்கினார்.

ஒரு மணித்துளி அமைதியஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்து, திரு. சமர்ப்பா குமரன் அவர்கள் ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே’ பாடலை உணர்ச்சிப்பொங்கப் பாடினார். மேலும்,  பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் 1983 ஆம் ஆண்டு இலங்கையில் கொல்லப்பட்டபோது அவர்களுக்குத்துணையாக (ஆதரவாக), பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் (‘உங்களுக்குச் சார்பாக 18 கல்தொலைவில் தமிழ் நாட்டில் உள்ள அண்ணன்மார்களும் தம்பிமார்களும் துணைக்குவந்து அனைத்து உதவிகளையும் புரிவார்கள்’ என்று) இயற்றிய  ‘மாவீரர்’ கவிதையைப் படித்தார்.

Layout 1

அமைப்பின் முன்னாள் தலைவர் திரு. தில்லைக்குமரன் அவர்கள் மொழியுரிமை முன்னெடுப்புப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்களை அறிமுகப்படுத்தினார்.

இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் தமது போராட்டத்தில்,  இந்தியாவின் மற்றமாநிலத்தில் உள்ளவர்களையும் இணைக்கும் முயற்சியில் பெற்றுவரும் வெற்றிகளைக் குறிப்பிடுகையில், ‘மற்ற மாநிலத்தவர்கள் தமிழர்களைப் புறந்தள்ளுவது இல்லை என்பதையும், வெறுப்பது இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்;  ஈழத் தமிழர்களுக்கு இலங்கையும் இந்தியாவும் புரிந்து வரும் கொடுமைகளைச் சரியான முறையில்  எடுத்துரைத்தால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தவரும்  ஈழத் தமிழர்களுக்கு   உறுதுணையாக இருந்து செயல் ஆற்றுவார்கள்’  என்று திரு. ஆழி செந்தில்நாதன் விளக்கினார்.

தொடர்ந்து தனது கருத்துக்களை திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் பகிர்ந்துகொண்டார். மாவீரர் நாளை வெறும் நினைவஞ்சலியாக மட்டுமில்லாமல் ஈழவிடுதலைப் போராட்டத்தைத் தொடந்து முன்னெடுக்கத் திட்டமிடும் நாளாகவும் நாம்மேற்கொள்ள வேண்டும் என்றும், இப்போராட்டத்தை உலகளவில் அனைத்து இன மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது: உலகின் ஊடகத் துறையை நாம் மிகவும் நன்றாகப் பயன்படுத்தி, நமது அறம் நிறைந்த (நியாயமான) நிலைப்பாட்டையும் கோரிக்கைகளையும் அனைவருக்கும் எடுத்து இயம்பி, அனைவரின் துணையையும் திரட்டவேண்டும்.  அதேவேளை, உலகின் அரசுகளின் நற்றுணையையும் திரட்டவேண்டும்.

இன்னும் பல நல்ல கருத்துக்களை இத் தொலைபேசிக் கூட்டத்தில் நம்மிடையே திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.   அவர்க்கு நமது பாராட்டுதல்களும் நன்றியும் உரித்தாகுக. அவரை உலகத் தமிழ் அமைப்புக்கு அறிமுகப்படுத்திய திரு. தில்லைக்குமரன் அவர்களுக்கும் நன்றி.

DSC_0133

அமைப்பின் இயக்குனர் முனைவர் தணி சேரன் அவர்கள் தோழர் தியாகு அவர்களை அறிமுகப்படுத்தினார்.

தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் நீத்து விதையாகியுள்ள மாவீரர்களை நினைவுகூர்ந்து உரையைத் தொடங்கிய தோழர் தியாகு அவர்கள், 1965 ஆம்ஆண்டு தமிழ் நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆவது ஆண்டு தற்போது நடைபெறுகிறது என்பதை நினைவுபடுத்தி,  இந்திய – இந்தி  வல்லாதிக்கத்தால் தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட 500-க்கும் மேற்பட்ட  தமிழர்களையும் நினைவுகூர்ந்தார்.

தமிழீழ வரலாற்றைப் பற்றியும், தனித் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்பதையும் தக்கச் சான்றுடன் விளக்கி  தமது கருத்துக்களைத் தோழர் தியாகு அவர்கள் பகிர்ந்துகொண்டார். பன்னாட்டு அரசியல் நடவடிக்கைகளின் போக்கு குறித்தும் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இதுவரை நடந்த இனப்படுகொலைகள் குறித்தும், பின்னர் அவர்கள் முன்னெடுத்தப் போராட்ட விளைவுகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து விடா முயற்சியுடன்  போராடுவதன் தேவை குறித்தும் விளக்கினார்.

பின்பு,  வழக்கம்போல் வினா–விடை நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பான வினாக்கள் எழுப்பப்பட்டன. நம்மை நாமே குறை கூறிக்கொள்ளும் வினாக்களும் இவற்றில் இருந்தன. காய்தல் உவத்தல் இன்றி, சமன் செய்து சீர்தூக்கி, அனைத்தையும் அறிவுப்பூர்வமாக ஆய்ந்து முடிவெடுத்தல் பாராட்டத் தக்கது. சிறப்புப் பேச்சாளர்கள் மிக அருமையாக, அறிவுக்கு ஏற்ற பதில்களை வழங்கினார்கள்.  தமிழ்ப் பகைவர்கள் நமக்கு எதிராக, வழக்கமாக எடுத்தெறிந்து கேட்கும் வினாக்களுக்கு சரியான பதில்களைக் கூறி அவர்களின் வாயை அடைக்கும் முகமாக இப் பதில்களை அடிப்படையாக வைத்து, இன்னும் மேலும் தக்கச் சான்றுகளைத் திரட்டி,  தமிழ்ப் பகைவர்களை வாதத்தில் வென்று துரத்தியடிக்க வேண்டும். அத்துடன், தமிழ்ப் பகைவர்கள், இரண்டகர்கள் ஆகியோரின் நச்சுப் பேச்சுக்களையும் செயல்களையும் புரிந்துகொள்ளாமல் நம்மிடம் விதண்டாவாதம் செய்யும் மற்ற நமது உறவுகளுக்கும் சரியான அறிவுறுத்தல் செய்து அவர்களையும் நமது பக்கம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழீழம்

கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சிறப்புப் பேச்சாளர்கள் கொடுத்த பதில்களில் சில பின்வருமாறு:

இந்திய அளவில் ஈழப்போராட்டம் குறித்த பல தவறான கருத்துக்கள் இன்னும் தொடர்ந்து நிலவுகின்றன. ஈழ விடுதலைக்கானத் தேவை குறித்து அவர்களுக்குத் தொடர்ந்து எடுத்துக்கூற வேண்டும்.

தமிழர்களுக்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன: தமிழ்நாடு, தமிழீழம்.  அவை ஒன்றுக்கொன்று துணையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரைப்பற்றி அறிந்து வைத்திருப்பது போல, ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் சிக்கல் குறித்து அறிய வேண்டும். ஒருவரின் நலன் அடுத்தவரின் நலனைச் சார்ந்துள்ளது என்ற கருத்தை தோழர் தியாகு அவர்கள் பதிவுசெய்தார்.

தமிழீழத் தாயகத் தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூன்று முனைகள்.இந்த மூன்று முனைகளில் இருந்தும் நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

2009 ஆம் ஆண்டு மே திங்கள் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் முழுப்பேரழிவு தமிழீழ விடுதலைக்கான தேவையை உறுதி செய்துள்ளதே தவிர, ஒழித்துவிடவோ தணித்துவிடவோ இல்லை.

முள்ளிவாய்க்கால் தமிழீழ மக்களின் படையாற்றலைச் சிதைத்துவிட்டது என்னும் போதே, அது அவர்களின் அற வலிமையைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த அற வலிமையை அரசியல் வலிமையாகப் பெயர்க்கக் கூடிய உள்ளாற்றல் நீதிக்கான போராட்டத்துக்கு உண்டு.

கடந்த 2009, 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இயற்றப்பட்டத் தீர்மானங்கள், அவற்றின் மீது நடந்த வாக்கெடுப்புகள், தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்ந்து நோக்கின், சிங்கள அரசின் ஏமாற்றுகளும், இந்தியாவும் மற்ற வல்லரசுகளும் செய்த சூழ்ச்சிகளும், நமது நீதிப் போராட்டங்களின் நல்ல தாக்கங்களும் புலப்படும்.

மாவீரர் துயிலும் இல்லம்-2

மீண்டும் மீண்டும் இராசீவ் காந்தி கொலையைப் பற்றிப் பேசி, தொடர்ந்துதமிழர்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதைத் தடுக்க நினைக்கும் சிலரின் கெடுசிந்தையை நாம் முறியடிக்க வேண்டும்.

இராசீவ் காந்தி ஏன் கொலை செய்யப்பட்டார் தெரியுமா? என்ற வினாவை எழுப்பி, அவர் ஈழத் தமிழர்களுக்கு எவ்வாறெல்லாம் எதிராகச் செயல்பட்டார் என்பதை விளக்கும் முகத்தான்,  அமைதிப்படை என்ற பெயரில் ஆக்கிரமிப்புப் படையை அனுப்பி பல்லாயிரக் கணக்கில் தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்தார்; ஏராளமான தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப் படுவதற்குக் காரணமாக இருந்தார்; விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லிவிட்டு, அதேவேளை தமிழர்களுக்கு எதிராக ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதம் வழங்கினார்; கொடுத்த  வாக்குறுதியை  நிறைவேற்றாமல் துரோகம் செய்தார்;  சமாதானப் பேச்சுக்கு வரும் தமிழீழத் தேசியத் தலைவரைப் பிடித்துக் கொன்றுவிடும்படி தூதுவர் சோதிந்திர நாத் தீட்சித் (Jyotindra Nath Dixit) மூலம் இந்தியப் படைக்குத் தலைமை வகித்த பஞ்சாப் அதிகாரி அர்கிரத் சிங் (Harkirat Singh) அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார், அந்த முறையற்ற ஆணையை ஏற்க மறுத்த அதிகாரியை உடனே பதவி மாற்றம் செய்துவிட்ட கொடுமை;  இன்னும் இராசீவ் காந்தி தமிழர்களுக்கு இழைத்த பிற கொடுமைகளை எல்லாம் எடுத்து அடுக்கி, ஆணித்தரமாக வாதிட்டு,  மற்றவர்களின் வாயை அடக்க வேண்டும் என்றார்.

ஈழ விடுதலைக்கான அற வலிமை நம்மிடம் உள்ளது.  அதனால் தொடர்ந்து போராடி வெற்றி பெறுவதற்கான அனைத்து  வாய்ப்புகளும் நம்மிடம் உள்ளன.    தமிழ்நாட்டிலும், வடமாகாண அவையிலும் இயற்றப்பட்டத் தீர்மானங்களும் நமது கோரிக்கைகளுக்கு வலுசேர்ப்பவை. தனித் தமிழீழ விடுதலைதான் தீர்வு என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று பதிவு செய்தனர்.

மலர்

இறுதியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

1. ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் தலைவர் வெளியிட்ட அறிக்கையை நாம் வரவேற்கின்றோம். ஆனால், பின்னர் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் ஏமாற்றமளிப்பவை. இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்று ஐ.நா. வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பொதுவாக்கெடுப்பை ஈழத்தமிழர்களிடையே நடத்த முன்வரவேண்டும். ஈழத்தமிழரின் விடுதலைப் போருக்கு தனித் தமிழீழமே தீர்வாகும்.

2. தமிழ் நாட்டு அரசின் தீர்மானத்தையும், வட மாகாண அவையில் இயற்றப்பட்டத் தீர்மானத்தையும் மதித்து, இலங்கைத்தீவில் நடந்த தமிழினப் படுகொலைக்குக் காரணமான அனைத்துப் போர்க் குற்றவாளிகளையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துமாறும், இலங்கையுடனான அனைத்து அரச உறவுகளையும் கைவிட்டு தனிமைப்படுத்துமாறும் இந்தியாவைத் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

3. இலங்கைப் போர்க் குற்றங்களைப் பற்றி இந்தியா முழுவதும் பரப்புரை மேற்கொள்ளுமாறும், அரசியல் துணையைத் திரட்டுமாறும் தமிழர் நலன் சார்ந்து இயங்கும் அரசியல் கட்சிகளையும், சமூக அமைப்புகளையும் வேண்டுகிறது.

4. தமிழ்நாட்டில் வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து மதுக்கடைகளையும் முழுமையாக மூடுவதற்குத் தக்க நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என தமிழ் நாட்டு முதல்வரை வலியுறுத்துகிறோம்.

5. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்துத் தொடந்து பல ஆண்டுகளாகப் போராடும் கூடங்குளம் மக்களின் கோரிக்கையை மதித்து உடனே அதனை நிறுத்த இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் கூடங்குளம் அணுமின் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Eelam-map-Tiger 

6. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க வேண்டி, தமிழ்நாட்டிற்குச் சொந்தமான, இந்திய அரசியல் அமைப்பு விதிகளுக்குப் புறம்பாக கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் தமிழ் நாட்டுடமையாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவும், அதற்கான செயலில் தமிழ்நாட்டு அரசு தொடர்ந்து ஈடுபடவும் வேண்டுகிறது.

7. தமிழ் நாட்டிலுள்ளப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறப்புடன் விளங்க, ஆங்கில வழிப்பளிகளை கைவிட்டு, தமிழ்மொழி வழிக்கல்வியை அனைத்துப் பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் நாட்டு அரசை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.

 8. தமிழ் நாட்டில் உள்ள ஈழத் தமிழ் ஏதிலிகளுக்கு உரிய உரிமைகளை வழங்கவும், சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாம்களை மூடவும், அனைவருக்கும் இலவசக் கல்வி, குடியுரிமை வழங்கவும் கேட்டுக்கொள்கிறது.

9. தமிழர்களின் நீர்வளங்களை விரிவுபடுத்தவும், ஆற்றுநீர் உரிமைமைகளை நிலைநாட்டவும் திடமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ் நாட்டு அரசை வலியுறுத்துகிறது. அடுத்த பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு அனைத்து நீர்நிலைகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழ் நாட்டரசை மீண்டும் வலியுறுத்துகின்றது.

10. சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாட்டு அரசையும், இந்திய அரசையும் வலியுறுத்துகிறோம்.

– உலகத் தமிழ் அமைப்பு, அமெரிக்கா

28-நவம்பர்-2015