மே-18 முதல் தமிழீழம் நோக்கிய சிற்றலை வானலை ஒலிபரப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது

மே-18 முதல் தமிழீழம் நோக்கிய சிற்றலை வானலை ஒலிபரப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது !

தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது.

புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப்பாலமாக நாதம்ஒலிபரப்பென, சிற்றலையூடாக (Shortwave) இந்த வானலை ஒலிபரப்பு அமையவுள்ளது.

தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட ஆசிய பரப்பெங்கும் இது ஒலிக்கவுள்ளது.

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான வெள்ளிக்கிழமை, இதன் 1 மணி நேர முதற் சிறப்பு ஒலிபரப்பு அமையவுள்ளது.

சிறிலங்காவில் தமிழின அழிப்பின், கொடிய போரின் வலிகளைச் சுமந்து நிற்கும் தாயக மக்களுக்கு, ஒத்தடமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் நோக்காக கொண்டு இதன் ஒலிபரப்பு அமையுமென, நா.த.அரசாங்கத்தின் துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ்நாடு, மலேசியா ,சிங்கப்பூர் என உலகத் தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் உணர்வுப்பாலமாகவும் இது அமையுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை முடக்க, பலவழிகளிலும் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசுக்கு, இலங்கையின் வான்பரப்பூடாக தமிழீழ மக்களை எட்டவுள்ள தமிழீழ அரசாங்கத்தின் வானலை ஒலிபரப்பு , கடும் சீற்றத்தினைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

நாதம் ஊடகசேவை