தமிழறிஞர் வா. செ. குழந்தைசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

தமிழறிஞர் வா. செ. குழந்தைசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

கல்வியாளரும், நீர்வளத்துறை வல்லுநருமான முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அளிக்கின்றது.

தமிழ்நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  துணைவேந்தராகவும், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை நிறுவித் தலைமையேற்று வழி நடத்திய பெருமைக்குரியவர்.

கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ்வழியில் அரசுப்பள்ளிகளில் படித்தார். இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின் செர்மனியிலும் அமெரிக்காவிலும் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அமெரிக்காவின் இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

vck

நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளதோடு, கலைச் சொல்லாக்கம், புதிய சொற்கள் உருவாக்கம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர். தமிழைச் செவ்வியல் மொழியாக இந்திய ஒன்றிய அரசு அறிவித்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் பல மதத்தினர். அவர்கட்குச் சமயம் அடையாளமன்று. அவர்கள் பல நாட்டினர். எனவே நாடும் ஓர் அடையாளமன்று; ஆனால் தமிழர்கள் ஒரு மொழியினர். அவர்கட்குத் தமிழ்தான் அடையாளம். அவர்கள் என்றெனினும், எங்கெனினும் தங்கள் அடையாளத்தைக் காக்கத் தமிழ் கற்க வேண்டும்” என்றார்.

தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பற்றுக் கொண்டிருந்தார். ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தார். அவரது மறைவு கல்வித் துறைக்குப் பெரும் இழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உலகத் தமிழ் அமைப்பின் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்புடன்,
முனைவர் வை. க. தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு
11-திசம்பர்-2016
அமெரிக்கா