தமிழ், தமிழர் என்பதே நம் அடையாளம் !

தமிழ், தமிழர் என்பதே நம் அடையாளம் !

தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் “திராவிடக் களஞ்சியம்” என்னும் பெயரில் வெளியிடுவதாகத் தமிழ் நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அண்மையில் வெளியிட்டதற்குக் கடும் கண்டனம் அனைவராலும் தெரிவிக்கப்பட்டவுடன், இராபர்ட் கால்டுவெல் என்னும் பாதிரியார் காலம் தொடங்கிக் கடந்த 150 -ஆண்டுகளில் வெளிவந்த கட்டுரைகள் முதலியவற்றைத் தொகுத்து, “திராவிடக் களஞ்சியம்” என்னும் பெயரில் தமிழ் நாட்டு அரசு வெளியிடப்போவதாக மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார். இந்த முயற்சி, தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும் என்பதால், திராவிடக் களஞ்சியம் என்பதை விட்டொழித்து, அதற்குப் பதிலாக “தமிழ்க் களஞ்சியம்” என்றுதான் பெயர் சூட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

திராவிடம் என்பது தமிழ்ச்சொல்லே அல்ல. அது வடமொழியில் இருந்து எடுக்கப்பட்ட சொல். திராவிடம் என்ற சொல் சங்ககாலத் தமிழ் இலக்கியம் எவற்றிலுமே கிடையாது. சங்க காலத்துக்குப்பின் இயற்றப்பட்ட ஐம்பெரும் காப்பியங்களான சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றிலும் இல்லை. அதற்குப்பின், பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவற்றிலும் இல்லை. (திருமறைக்காடு திருத்தாண்டகத்தில், திருநாவுக்கரசர், “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என்றுதான் தமிழர்களையும் ஆரியர்களையும் வேறுபடுத்திப் பாடுகின்றார். தமிழன் என்றுதான் குறிப்பிடுகின்றார், திராவிடன் என்று அல்ல! திருநாவுக்கரசரின் காலம் 7-ஆம் நூற்றாண்டு.). பின்பு, சித்தர் இலக்கியங்களிலும் திராவிடம் என்பது கிடையாது.

திராவிடம் என்று ஒரு மொழியும் இல்லை, இனமும் இல்லை, நாடும் இல்லை. ஆனால் தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்கள் தமிழ் இலக்கியங்களில் விரவி கிடக்கின்றன. பரிபாடல், சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம், பெரியபுராணம் இன்னும் பிறவற்றில் தமிழ்நாடு என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொழியின் அடிப்படையில்தான் இனமும் நாடும் உள்ளன. இதுதான் உலக வழக்கு. பிரஞ்சு மொழி பேசுவோர் பிரெஞ்சுக்காரர்கள், அவர்களுடைய நாடு பிரான்சு நாடு. இத்தாலி மொழி-இத்தாலியர்கள்-இத்தாலி நாடு; ரசிய மொழி-ரசியர்கள்-ரசிய நாடு; சீன மொழி-சீனர்கள்-சீன நாடு. இதுபோல், தமிழர்களின் மொழி தமிழ். தமிழர்களின் இனம் தமிழினம். தமிழர்களின் நாடு தமிழ் நாடு, மற்றும் தமிழ் ஈழம்.

தமிழ்நாட்டில் விசயநகர மன்னர்களின் தெலுங்குத் தளபதிகளின் ஆட்சியில், தெலுங்கு பிராமணர்களின் செல்வாக்குக் கொடிகட்டிப்பறந்தது. இந்த ஆட்சியில் தெலுங்கு, வடமொழி ஆகியவற்றுக்கு முதன்மைத்துவம் கொடுக்கப்பட்டு, தமிழும் தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டதுடன் பல குமுகச் சீரழிவுகளும் நடைபெற்றன. சனாதன தர்மம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது; தமிழர்களிடமிருந்து விளைநிலங்கள் பறிக்கப்பட்டு தெலுங்கர்களிடம் கொடுக்கப்பட்டது. தமிழர்களிடமிருந்து கோயில்கள் பறிக்கப்பட்டன. கோயில் கருவறைகளில் இருந்து தமிழ் வெளியேற்றப்பட்டது. அதன் விளைவுகளை இன்றும் தமிழர்கள் நாம் அனுபவித்துக்கொண்டுள்ளோம் என்பது வேதனையானது. இத் தெலுங்கர்களின் ஆட்சிக்குப் பின் வந்த தமிழ் இலக்கியங்களில்தான் “திராவிட” என்ற சொல் முதன்முதலில் காணப்படுகின்றது.

ஆனால், தமிழ் நாட்டின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றை எடுத்துக்கொண்டால், மிக அண்மையில்தான், 1856 –ஆம் ஆண்டில், இராபர்ட் கால்டுவெல் என்னும் பாதிரியார் , “A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages” என்ற பெயரில் வெளியிட்ட நூலில் ‘திராவிடியன்’ என்னும் சொல் குறிக்கப்பட்டபின்புதான் இச்சொல் வழக்கத்துக்கு வந்தது. தமிழர் அல்லாதோர் இச்சொல்லைத் தங்களின் தன்னலத்துக்காக வசதியாகப் பயன்படுத்திக் கொண்டனர். கால்டுவெல் பாதிரியார் அவர்களுக்குத் திராவிட என்னும் சொல் எங்கிருந்து கிடைத்தது? தமிழ் இலக்கியங்களில் இருந்தா? இல்லை! வடமொழியில் இருந்துதான் இச்சொல்லைக் கடன்வாங்கியுள்ளார். “திராவிட” என்ற சொல்லை உருவாக்கியவர்கள் ஆரியர்களே! “திராவிட” என்ற சொல்லை சமற்கிருத நூல்களான “மனுஸ்மிருதி” யில் இருந்தும், குமாரிலபட்டரின் “தந்திரவார்த்திகா” நூலிலிருந்தும் எடுத்துக் கொண்டதாகக் கால்டுவெல் அவர்களே கூறியுள்ளார்.

கால்டுவெல் அவர்களுக்கே திராவிட என்னும் சொல்லின் உண்மைத்தன்மை மீது ஐயம் இருந்துள்ளது! அதனால்தான், Dravidian என்று மட்டும் குறிப்பிடாமல், “Dravidian or South-Indian” என்று அவருடைய புத்தகத்துக்குத் தலைப்பிடுகின்றார். கால்டுவெல் தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் இழிவு ஏற்படுத்த கூடிய வகையில் என்னென்ன தவறுகளைத் தமது ஒப்பிலக்கண நூலில் செய்துள்ளார் என்பதைப் பாவாணர் ‘தமிழ் வரலாறு’ எனும் நூலில், “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ் சறுக்கல்கள்” என்று பட்டியல் இட்டுள்ளார்.

திராவிட மொழிக்குடும்பம் என ஒன்று கிடையாது. ஆங்கிலேயே அதிகாரியாக இருந்து தமிழ் மொழியாய்வு செய்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் தென்னிந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை; இவற்றின் தாய் தமிழ் மொழி என்று கூறினார். தென்னிந்திய மொழிக் குடும்பம் என்று நிலவியல் அடிப்படையில் இம்மொழிகளை வகைப்படுத்தினார்.

நிற்க. வரலாறு கூறுவது என்ன? கைபர், போலன் கணவாய் வழியாக நுழைந்த பிராமணர்கள், பல நூறாண்டுகளுக்குப்பின், இரண்டு பிரிவாகப் பிரிகின்றனர். கிழக்கில் சென்றவர்கள் கௌடர்கள். தெற்கில் வந்த பிராமணர்கள் திராவிடர்கள்! இவர்கள் பஞ்ச திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் — குஜராத், மகாராஷ்டிரா, கருநாடகம், ஆந்திரா, தமிழ் நாடு ஆகிய ஐந்து பகுதிக்கும் வந்தவர்கள். ( அப்பொழுது மலையாளம்/கேரளா தமிழ்நாட்டின் ஒரு பகுதி. )

ஆக, திராவிடர் என்பது தெற்கே வந்துள்ள பிராமணர்களை மட்டுமே குறிக்கும் !

பிராமணர் அல்லாதவர்கள்தான் திராவிடர்கள் என்ற திட்டமிட்ட பொய்ப்பரப்புரையினால், கடந்த 75 ஆண்டுகளாக தமிழர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். (சரியாகச் சொன்னால், மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கு இடம் கொடுக்கும் ஏமாளிகளாக நாம் இருந்தோம். “வல்லவனாகவும் இருக்கவேண்டும் நல்லவனாகவும் இருக்கவேண்டும்” என்று ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தரின் தேவாரம் எடுத்துரைக்கின்றது ! ) 2009-ஆம் ஆண்டில் ஈழத்தில் தமிழ் இனப்படுகொலை நடத்தப்பட்டபின், தமிழர்கள் நாம் விழித்துக்கொண்டோம். திராவிடம் என்பது கருத்தியல் இரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. தமிழ் தேசியம் தான் உண்மையானது என்பதை அனைத்துத் தமிழர்களும் உணர்ந்து வருகின்றனர்.

தெலுங்கர்களோ, கன்னடர்களோ, மலையாளிகளோ தங்களைத் திராவிடர்கள் என்று ஒருபோதும் கூறிக்கொண்டது இல்லை, கூறிக்கொள்வதும் இல்லை. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட அடையாளத்தில், தனித்துவத்தில் உறுதியாக உள்ளனர். அதில் தவறு ஏதும் இல்லை. அஃது அவர்களுடைய உரிமை. தமிழர்கள் மட்டும் தங்களுடைய அடையாளத்தை அழித்துவிட்டு, தனித்துவதைத் துறந்துவிட்டு, திராவிடர்கள் என்று ஏன் தங்களைச் சிறுமைப் படுத்திக்கொள்ளவேண்டும்? இல்லாத, கற்பனையான திராவிடத்தை நாம் ஏன் சுமந்துகொண்டு மற்றவர்கள் நம்மை ஆள்வதற்கு இடம் கொடுக்க வேண்டும்?

‘திராவிடத்துக்குள் அடங்கியதுதான் தமிழ்’ என்று உண்மைக்கு மாறாகப் பரப்புரை செய்து மக்களை மடைமாற்றும் செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். இது தமிழ் மொழியை, தமிழ் இனத்தை, தமிழர்களின் தனித்தன்மையை, தமிழர்களின் தொன்மத்தை, தமிழர்களின் அடையாளத்தை, மறைத்து இவற்றையெல்லாம் நீர்த்துப்போகவைத்து அழித்தொழிக்கும் செயல். அவர்கள், தமிழர் நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்பார்கள்; தமிழ் இனத்தைத் திராவிட இனம் என்பார்கள்; தமிழர் கட்டடக்கலையைத் திராவிடக் கட்டடக் கலையாக்குவார்கள்; சிந்து சமவெளியில் பேசப்பட்டது தமிழ் என்ற கருத்தை மாற்ற திராவிட மொழி என்று புதிதாக நுழைப்பார்கள்; கீழடியை திராவிட நாகரிகம் என்பார்கள்; தமிழ் மன்னர்களை எப்போதும் பழிப்பார்கள், அவ்வப்போது திராவிட மன்னர்கள் என முத்திரை குத்துவார்கள்; விசயநகர ஆட்சியில் நடைபெற்ற சீரழிவுகள் பற்றி வாய்த் திறக்காமல் கவனமாக இருப்பார்கள். தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுக் கூலிகளாக்கப்பட்டதைப் பற்றி மூச்சுவிடமாட்டார்கள்; தமிழர் திருநாளை திராவிடத் திருநாள் என்பார்கள்; தமிழர்களை திராவிடர்கள் என்பார்கள், வேற்று மொழியினரை தமிழர்கள் என்பார்கள்;

ஆனால் இவற்றையெல்லாம் ‘தமிழ் வாழ்க’ என்று ஒரு பக்கம் கூவிக்கொண்டே செய்வார்கள்! பொய் சொல்லும்பொழுது அதில் கொஞ்சம் உண்மையும் கலந்திருக்க வேண்டும் என்ற நுண் அரசியலை நன்றாகக் கடைப்பிடித்து, நியாயமானவர்கள்போல் நடித்து ஏமாற்றுவதில் வல்லவர்கள். முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூக நீதிக்காக உயிரையும் தியாகம் செய்பவர்கள், சாதி ஒழிப்புக்காகவே பிறவி எடுத்தவர்கள், இலக்கியவாதிகள், மார்க்சிஸ்டுகள் என்று பல வடிவங்களில் வருவார்கள் இந்தக் ‘கேள்போல் பகைவர்கள்‘.

இவர்கள் அருமையான தமிழ்ப் பெயர்களைத் தங்களுக்கும் உறவினர்களுக்கும் சூட்டியிருப்பார்கள். நம்மைவிட மிக நன்றாகத் தமிழ்ப்புலமையுடன் விளங்குவார்கள். (”உன்னைவிட உன் எதிரி உன் மொழியைச் சிறப்பாகப் பேசுகிறானென்றால், அவனுக்கு உன்னை ஆளும் ஆசை வந்துவிட்டது என்று பொருள்” – வியட்நாமிய பழமொழி)

தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாட்டு அரசு, தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும்தான் அரசுப்பணத்தைப் பயன்படுத்த வேண்டுமேயல்லாது திராவிட ஆராய்ச்சிக்கு வீண் விரயம் செய்யக்கூடாது. வடமொழிக்கும் ஆரியர்கள் தொடர்பான செயல்களுக்கு ஆதரவாகவும் நமது வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் ஒன்றிய அரசை கடுமையாக எதிர்க்கும் தமிழர்களாகிய நாம், திராவிடத்துக்கு ஆதரவாகவும் திராவிடத்துக்குப் பரப்புரை செய்யவும் நமது வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் தமிழ் நாட்டு அரசையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்; இந்த அடாவடிச் செயலை நிறுத்தும்படி ஆவன செய்யவேண்டும்.

சங்ககாலத் தமிழ் இலக்கியங்களாக இருப்பினும், கடந்த 150 ஆண்டுகளைச் சேர்ந்த தமிழ் படைப்புகளாக இருப்பினும், அவற்றைத் தமிழ்க் களஞ்சியம் என்னும் பெயரில்தான் வெளியிட வேண்டும், திராவிடக் களஞ்சியம் என்னும் பெயரில் வெளியிடக்கூடாது. செம்மொழி தகுதி வழங்கப்பட்டது தமிழ் மொழி என்ற அடிப்படையில்தான், திராவிட மொழி என்ற அடிப்படையில் அல்ல;

திராவிடம் என்பது அரசியலை குறிக்கும் ஒரு கூட்டுச் சொல்லாகவே தமிழ்நாட்டில் முதலில் சொல்லப்பட்டது ஆனால் அச்சொல்லை தமிழின் மரூஉ சொல்லாக மாற்ற முனைவது தமிழுக்குச் செய்யப்படும் தீங்கு என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்ட பேருண்மை. தமிழ்நாட்டைக் கலப்பின மாநிலமாக்கும் செயல்பாடுகளில் தமிழ்நாட்டரசு ஈடுபடக்கூடாது. தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாட்டு அரசு இந்தச் செயலில் ஈடுபடுவது கயமையின் உச்சம். இதை உடனே நிறுத்தாவிட்டால், காலவட்டத்தில் தமிழ் மொழியும் தமிழர்களும் அழிந்தொழிந்து திராவிடர்கள் என்று ஆகிவிடுவோம். தமிழ் ஈழத்தின் சில பகுதிகளில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழர்களாக இருந்தவர்கள் இப்பொழுது சிங்களவர்களாக மாற்றப்பட்டுவிட்டனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கவனமாக இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது நமது தலையாயக் கடமை.

தமிழ், தமிழர் என்பதே நம் அடையாளம் !

அன்புடன்,
இரவிக்குமார் சுப்பிரமணியம்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

செப். 07, 2021
வாசிங்கடன் டி.சி.