மாணவர்களைத் தாக்கியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் !

மாணவர்களைத் தாக்கியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் !

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துகளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஒரு திரைப்படத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளது உலகத் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தீயச் செயலை அனைவரும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும். மக்களாட்சி முறைப்படி அறவழியில் ஒரு கருத்துக்கு (படத்துக்கு) எதிப்பு தெரிவிப்பவர்களை, கருத்தியல் முறையில் எதிர்கொள்ளாமல், தாக்குவது காயப்படுத்துவது என்பது அனைவரையும் அச்சத்திற்குட்படுத்த வேண்டும் எனும் தீயநோக்கோடு செய்யப்படும் கொடுங்கோன்மைவாதம் என்பதை உணர்த்துகின்றது.

இக்கொடியச் செயல் இனி எங்கும் நடக்காமல் இருக்க அனைத்து இயக்கங்களும் இதனைக் கண்டிக்க வேண்டும். நம்மைப்போன்றே அனைத்துத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களின் பாதுகாப்பிற்காகவும், போராடும் உரிமைக்காகவும் நாம் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் அறிவுறுத்துகின்றன. அறவழிப் போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் பெயர்போன தமிழ்நாட்டில் மாணவர்களைத் தாக்கியது என்பது ஒரு கரும்புள்ளியாகவே அமையும். இத்தீச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் உலகத் தமிழ் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது, அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

அன்புடன்,

க. தில்லைக்குமரன்; தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

17-ஆகத்து-2014; அமெரிக்கா