பிப்ரவரி 21 – பன்னாட்டுத் தாய்மொழி நாளை அனைவரும் கொண்டாடுவோம் !

பிப்ரவரி 21 – பன்னாட்டுத் தாய்மொழி நாளை அனைவரும் கொண்டாடுவோம் !

தமிழ் மொழி தொன்மையான மொழி, உலகின் முதல் மொழி என்பது உண்மையின் கூற்று. வரலாற்றுப் பாதையில் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாகப் பயணித்த தமிழ் இன்றும் பலகோடி மனிதர்களின் பேச்சு, எழுத்து, கல்வி, அலுவல் மொழியாக உள்ளது.

காலம்தோறும் தமிழுக்காக உழைத்த, இயக்கம் கண்ட மொழிப்பற்றாளர்களின் அரும்பணியும், ஈகமும், அயராத உழைப்பும்தான் இதனைச் சாத்தியப்படுத்தியது. தமிழ்மொழி இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை தற்காலத்தில் சந்தித்து வருகின்றது. உலகமயமாக்கலின் தாக்கம், கல்வியில் ஆங்கில மொழியின் ஆதிக்கம், அரசியல் பின்புலம், தமிழர்களின் குறைவான மொழி விழிப்புணர்வு போன்ற காரணிகள் நெருக்கடிக்குக் குறிப்பிடதக்க காரணிகள். இந்த நெருக்கடிகளுக்கு எந்த மொழியும் விதிவிலக்கில்லை. தங்களின் தாய்மொழியைப் பாதுகாப்பாக அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்கு ஆவன செய்வதில் புலம்பெயர்ந்த சமூகங்களின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று.

தமிழர்கள் திரண்டு திறம்படச் சங்கங்களாகச் செயலாற்றி வரும் நிலையில், தமிழ் அமைப்புகள் இல்லாமல் தமிழர்களை ஒன்றிணைப்பது சாத்தியப்படாது. தமிழர்கள் ஒன்றிணையாமல் தமிழைப் பாதுகாக்க இயலாது. எனில் தமிழ் பாதுகாப்பில் தமிழ் அமைப்புகளின் பங்களிப்பு எத்தகைய முகாமையானது என்பதை நம்மால் உணர முடியும். நல்வாய்ப்பாக வடஅமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் மாநில அளவிலும், கூட்டமைப்பாக ஒன்றிய அளவிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. தமிழ் வளர்ச்சியில் இந்த அமைப்புகள் இயன்றளவு பங்களிப்பு செய்யும் அதே வேளையில் இப்பணிகள் மேலும் பன்மடங்கு பெருகவேண்டும் என்பதே தமிழை உயிராக நேசிக்கும் அனைத்து தமிழர்களின் அவா.

பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International mother language day) ஒவ்வொரு ஆண்டும் ஐக்கியநாடுகள் அவையால் பிப்ரவரி 21ஆம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. நம் தாய்மொழியான தமிழ் குறித்தான விழிப்புணர்வை பரப்புரை செய்ய பன்னாட்டுத் தாய்மொழி நாள் களம் அமைத்து கொடுத்துள்ளது. இந்நாளில் தமிழ் அமைப்புகள் தங்கள் செயற்பாட்டாளர்களின் உதவியுடன் சிறப்பு நிகழ்வுகள் நடத்தி, பன்னாட்டுத் தாய்மொழி நாளில் தமிழ் மொழியைச் சிறப்பிக்குமாறு உலகத் தமிழ் அமைப்பின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம். இவ்வாண்டு பன்னாட்டுத் தாய்மொழி நாளை கொண்டாடுவது வரும்காலத்தில் தொடர்ந்து நிகழ்வுகள் நடத்த நல்ல துவக்கமாக அமையும். பன்னாட்டுத் தாய்மொழி நாளில் தாங்கள் நடத்தும் நிகழ்வுகள் தமிழ்வளர்ச்சி குறித்த விழிப்புணர்வுக்கு ஆவன செய்யும் என்பது திண்ணம்.

 

அன்புடன்,

இராசரத்தினம் குணநாதன்

தலைவர்உலகத் தமிழ் அமைப்பு