மானுடம்போற்றிய மாமனிதர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவுக்கு வருந்துகின்றோம்!

மானுடம்போற்றிய மாமனிதர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவுக்கு வருந்துகின்றோம்!

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

என்றார் வள்ளுவப் பெருந்தகை. கொல்வதையே ஒரு தண்டணை முறையாகக் கொண்ட அறநெறியைத் தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து இயங்கிய நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருந்துகின்றோம். தன்னுடைய பணியிலும் பொதுவாழ்விலும் அரசியலிலும், நேர்மையாகவும் தூய்மையாகவும் மக்கள் நலன் சார்ந்தும் அயராது உழைத்த மாமனிதரை இழந்து நிற்கின்றோம். தன்னுடைய உடல் நலமில்லாத போதும், தன் அகவை நூற்றாண்டை நெருங்கிய காலத்திலும், ஓய்வறியாது தொடர்ந்து சாவுத் தண்டணைக்கு எதிராகவும் சிறையிலடைக்கப்பட்டோர் உரிமைக்காகவும் குரல் கொடுத்தார். தமிழர் மூவரின் தூக்குத் தண்டணையை நீக்குவதிலும் அவரின் பங்களிப்பு அளப்பரியது. சாவுத் தண்டணையற்ற நாளைய இந்தியாவில் நீதியரசரின் பெயர் பொன்னேடுகளில் பதியப்படும். நூறு ஆண்டுகள் நிறைவான வாழ்வை வாழ்ந்து பல நூற்றுக் கணக்கானோர்க்கு வழிகாட்டியாகவும், இந்தியாவின் நீதித்துறையைச் செழுமைப்படுத்துவதிலும் தன் பங்களிப்பைச் செலுத்தியுள்ள, மானுடத்தைப்போற்றிய அம் மாமனிதரை வணங்குகின்றோம். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தார்க்கும், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை உலகத் தமிழ் அமைப்பு தெரிவித்துக்கொள்கின்றது.

அன்புடன்,
க. தில்லைக்குமரன்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு (www.worldthamil.org)
04-திசம்பர்-2014, அமெரிக்கா