ஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம்! – உலகத் தமிழ் அமைப்பு

ஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம்! – உலகத் தமிழ் அமைப்பு

ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்ட வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இருபது கூலித் தொழிலாளர்களை ஆந்திரக் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலை செய்திருக்கிறது. இவர்கள் யாரும் செம்மரக் கடத்தல்காரர்கள் அல்ல. இவர்கள் அந்தக் கடத்தல் தொழிலின் பங்குதாரர்கள் அல்ல. அப்படியே அவர்கள் செம்மரம் வெட்டுவது குற்றமென்றால் முறைப்படிக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தியிருக்க வேண்டும்.

படுகொலை செய்த காவல்துறையினர் மீது நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து ஆந்திர அரசு அறிக்கை பெற வேண்டும். அதனடிப்படையில் கடத்தலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

உலகத் தமிழ் அமைப்பு  இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆந்திர சிறைகளில் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு அரசு விரைந்து செயல்பட்டு அவர்களை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக் கடைகளை மூடி, கல்வி – வேலை வாய்ப்புகளைப் பெருக்கி இளைஞர்களை நல்வழிப் படுத்த தமிழ்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்துகிறது.

தலைவர், உலகத் தமிழ் அமைப்பு
முனைவர் வை. க. தேவ்
04-மேழம்-2046, அமெரிக்கா