முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்!
வட அமெரிக்காவில் உள்ள வாசிங்டன் பகுதியில் மே 17 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினப்படுகொலைப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள், போராளிகள், உயிர் ஈகம் செய்தோரை நினைவுகூர்ந்து, அமைதியஞ்சலியும் மலரஞ்சலியும் செலுத்தினர். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெண்கள், குழந்தைகள் பெருமளவில் கலந்துகொண்டனர். நினைவஞ்சலி நிகழ்ச்சியை உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization, Inc.) ஒருங்கிணைத்தது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் இனப்படுகொலை செய்யப்பட்ட நமது தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
தனித் தமிழீழமே தீர்வு என்றும், அத்தீர்வை அடைய இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், அதற்கு முதலில் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும் என்றும் ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கூறினார்.
ஈழத்தின் இன்றைய நிலை மாற வேண்டுமானால் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும் என்றும், தனித்தமிழீழம் குறித்த முடிவை ஈழத்தமிழர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கூறினார்.
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்றும், அங்கு பொதுவாக்கெடுப்பை நடத்த பன்னாட்டு அரசுகள் முன்வர வேண்டும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையமைச்சர் மாண்புமிகு உருத்திரகுமாரன் அவர்கள் ஆற்றிய நினைவேந்தல் உரையில் கூறினார்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தொலைப்பேசிக் கூட்டழைப்பு வழியாக பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
– உலகத் தமிழ் அமைப்பு (www.worldthamil.org)
மே 17, 2015, அமெரிக்கா