தமிழின உரிமைகளுக்காகப் போராடும் இளையோர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் !
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழினத்தால் கொண்டாடப்படும் ஏறுதழுவல் எனும் வீர விளையாட்டை, இன்று தமிழ் மண்ணில் நடத்த இயலாதவாறு சூழ்ச்சியால் தடை செய்யப்பட்டுள்ளது. ஏறுதழுவல் என்பது வெறும் விளையாட்டல்ல; தமிழரின் பண்பாட்டுத் தொடர்ச்சி, வரலாற்று எச்சம், தமிழின உரிமை, தற்சார்புப் பொருளாதாரம், வேளாண்மை – நாட்டு மாட்டினம் காத்தல் என்று நம் வாழ்வியலோடு இரண்டறக் கலந்துள்ள ஓர் உரிமையை மீட்டெடுக்கும் போராட்டமிது என்பதை அறிந்துத் தன்னெழுச்சியாகக் களம் கண்டுள்ளீர்கள்.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின்னர், மாணவர்களும் இளையோர்களும் பெண்களும் சிறுவர்களும் ஏறுதழுவல் எனும் தமிழின உரிமையைக் காக்கக் களத்திற்கு வந்துள்ளீர்கள். அவ்வப்போது தமிழீழ மக்களின் உரிமைக்காகவும் அண்மைக்காலங்களில் மாணவர்கள் போராடியதையும் நன்றியோடு எண்ணிப்பார்க்கின்றோம். இப்போதுள்ள சமூக ஊடக வலிமை அன்று இருந்திருந்தால், தமிழ்நாட்டு இளையோர்கள் ஈழத்தமிழர்களை இனப்படுகொலையில் இருந்து காத்திருப்பார்கள் என்ற எண்ணமெழுகின்றது. நிற்க !
கண்ணயராது பசியறியாது இரவும் பகலுமாக இளையோர்க் கூட்டம் அயராதுத் தொடர்ந்து போராடுவது, உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களிலும் புதுத் தெம்பைப் பாய்ச்சியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் அனைவர் நெஞ்சிலும் நம்பிக்கையை விதைத்துள்ளீர்கள். கண்ணெதிரே நடந்த இனப்படுகொலையைத் தடுக்க இயலாதவர்களாக இருந்தோமே என்ற ஏமாற்ற உணர்விலிருந்து மீட்டு, அனைவருக்கும் தன்னம்பிக்கையை, தமிழின உரிமைகளை மீட்டெடுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள்.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் வணிகச் சூழ்ச்சியைத் தகர்க்கவும், ஏறுதழுவல் நடத்துவதில் தற்போதுள்ள சட்டச்சிக்கலைத் தீர்க்கவும் வாழ்த்துகின்றோம். அதேபோல் உழவர்களின் துயர்த் துடைக்கவும், தொடர்ந்து தமிழரின் அனைத்து உரிமைச் சிக்கல்களுக்கும் குரல்கொடுக்கவும் உரிமையோடு வேண்டுகிறோம்.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
தமிழரின் பண்பாட்டு அடையாளமாகவும், பொருளியல் அடிப்படையாகவும், வாழ்வியல் உரிமையாகவும் விளங்கும் ஏறுதழுவலை மீட்டெடுக்க மிகுந்த எழுச்சியோடு தன்னலம் பாராமல் இரவுபகலாகப் போராடும் இளையோர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறோம், மேலும் எமது நல்வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்,
முனைவர் வை. க. தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு
18-சனவரி-2017
அமெரிக்கா